Headlines

சிவகங்கை இரட்டை படுகொலை : தொடரும் போராட்டத்தால் பதற்றம்

சிவகங்கை இரட்டை படுகொலை : தொடரும் போராட்டத்தால் பதற்றம்

சிவகங்கை அருகே ஆள் மாறி நடைபெற்றதாக கூறப்படும் இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை நோக்கி போராட்டக்காரர்கள் கூட்டமாக நடந்து சென்று வருகின்றனர்.

இருவர் வெட்டிப் படுகொலை

சிவகங்கை அருகே பழமலை நகர் கண்மாய் பகுதியில், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டியன் ஆகிய இரு இளைஞர்கள் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.

ஆள் மாறி கொலை?

போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ள தகவலின்படி, மாத்தூரைச் சேர்ந்த ரவுடி புலிப்பாண்டியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், தவறுதலாக அங்கு இருந்த தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டியன் ஆகியோர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இரு ரவுடி தரப்பினருக்கு இடையேயான நீண்டகால முன்விரோதமே இந்த கொலைச் சம்பவத்துக்கு காரணம் என போலீஸ் தரப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வரும் முன்விரோதத்தில் பல்வேறு தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் மாத்தூர் பகுதியில் ரவுடி ஊர்காவலன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், தற்போதைய இரட்டை கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல்களை வாங்க மறுத்து போராட்டம்

இந்த நிலையில், எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாத தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டியன் ஆகியோர் ஆள் மாறி கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள உறவினர்கள், குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தடியடி – 79 பேர் கைது

நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து, போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 79 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில், இன்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்வதால் சிவகங்கை மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஆட்சியரை சந்திக்க முடியாததால் கோஷம்

இதனிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியஸ்தர்கள் சிலர், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால், மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்திக்காததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், ஆட்சியரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அவர்கள் தேசிய நெடுஞ்சாலை நோக்கி நடந்து சென்றனர்.

போலீஸ் குவிப்பு

போராட்டம் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்பு சம்பவ இடத்திற்கு நேரில் வந்துள்ளார்.

இதற்கு முன்பாகவும், போராட்டக்காரர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. எனினும், சமரசம் ஏற்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

பாதுகாப்புப் பணியில் 2 ஏஎஸ்பிக்கள், 3 டிஎஸ்பிக்கள், 15 காவல் ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுமார் 260 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சட்டம்–ஒழுங்கு குறித்து கேள்வி

இரு ரவுடி கும்பல்களுக்கு இடையேயான மோதல் காரணமாக அப்பாவி இளைஞர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ரவுடி கும்பல்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதிலும், முன்கூட்டியே தகவல்களை சேகரிப்பதிலும் காவல்துறை மற்றும் உளவுத்துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான விசாரணையை ராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணன் நேரடியாக கண்காணித்து வருகிறார்.

தற்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்பு சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மானாமதுரை–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெறுவதால் சிவகங்கை பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *