தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே சமையல் தொழிலாளி ஒருவர் குடிபோதையில் தனது தாய் மற்றும் மகளை கொடுவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிகாரப்பட்டி, அம்மன்நகரை சேர்ந்தவர் சுரேஷ், 45. சமையல் மாஸ்டர். இவர் தனது தாய் உமாராணி, 65, மற்றும் மகள் சின்மய்யுடன் வசித்து வந்தார்.
இவரது மனைவி ஷாலினி, கணவரை பிரிந்து சில வாரங்களுக்கு முன் சேலத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த சுரேஷ், மகள் சின்மய்யிடம் சாப்பாடு கேட்டுள்ளார். சின்மய், பாட்டி உமாராணியிடம் இருந்து சாப்பாடு எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
அப்போது, மனைவி தன்னை பிரிந்து வாழ்வதற்கு தாயும், மகளும் தான் காரணம் எனக்கூறி ஆத்திரத்தில் கொடுவாளால் மகளை வெட்டியுள்ளார்.
பேத்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உமாராணி, சுரேஷை தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த சுரேஷ், தாய் உமாராணியையும் கொடுவாளால் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த சின்மய், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் தாய், மகளை கொலை செய்த சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
