கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், இருதரப்பு பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு தீவிரமாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இடையே வகுப்பறையில் தனிப்பட்ட காரணங்களால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்த இருதரப்பு பெற்றோர்களும் பள்ளிக்கு நேரில் வந்துள்ளனர்.
அப்போது பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை திடீரென முற்றி, பள்ளி வளாகத்திலேயே ஒருவரையொருவர் கட்டைகளாலும், கைகளாலும் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.
குறிப்பாக, பெண்கள் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டனர்.
பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் முன்னிலையிலேயே இந்த மோதல் அரங்கேறியுள்ளது.
பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொண்ட இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளியின் ஒழுக்கத்தை சீர்குலைத்ததாகக் கூறி, இந்த மோதலுக்குக் காரணமான 8 மாணவிகளைப் பள்ளி நிர்வாகம் தற்காலிக நீக்கம் (Suspend) செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:
இதற்கிடையே, இந்தச் சம்பவத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும், இது முழுக்க முழுக்க இரு குடும்பங்களுக்கு இடையே நடந்த தனிப்பட்ட மோதல் என்றும் காவல்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
