Headlines

சேலம் பெண் கொ** வழக்கு : காதல் ஜோடி உட்பட 3பேர் கைது

சேலம் பெண் கொ** வழக்கு : காதல் ஜோடி உட்பட 3பேர் கைது

சேலத்தில் பெண்ணை ஏழு துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிய வழக்கில் இளம் காதல் ஜோடி மற்றும் கறிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். நான்கு பவுன் நகைக்காக பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம் மாநகர் அரிசிபாளையம் பகுதியில் குணபால ராமசாமி தெருவை சேர்ந்த ரமேஷ் (62)கோவில் பூசாரி இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது குடும்பத்துடன் தஞ்சாவூருக்கு சென்று அடுத்தநாள் அதிகாலை வீட்டிற்கு திரும்பினார் .

விடியற்காலை குளிப்பதற்கு வீட்டு குழாயில் தண்ணீரை திறந்து பார்த்த போது கடுமையான துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து மேலே உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்த போது அதில் ஒரு சாக்கு முட்டையில் மனித கை, கால்கள் இருந்தன, மற்றும் ஒரு தண்ணீர் தொட்டியில் மேலும் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.

இது குறித்து அவர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில் பள்ளப்பட்டி காவல்துறையினர் விரைந்து விசாரணை நடத்தி தண்ணீர் தொட்டிகளை திறந்து பார்த்தனர்.

அதில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் ஆறு துண்டுகளாக இருந்தது. இடுப்பு பகுதி காணாமல் இருந்ததால் அருகில் உள்ள மற்ற வீடுகளில் தண்ணீர் தொட்டியில் தேடினர்.
மேலும் ரமேஷின் வீட்டில் பின்புறம் உள்ள சீனிவாசன் என்பவரது வீட்டு தண்ணீர் தொட்டிக்கு அடியில் ஒரு சாக்கு மூட்டையில் அந்த பாகம் இருந்தது இதை எடுத்து ஏழு உடல் பாகங்களையும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை அடையாளம் காண தேடினர். அதில் கொலையான பெண் கையில், ராஜேந்திரன், கணபதி என பச்சை குத்தப்பட்டு இருந்தது மூலம் துப்பு துலங்கியது.

சேலம் அயோத்தியாபட்டினம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் காவல் நிலையத்திற்கு வந்து தனது மனைவி கையில் தான் ராஜேந்திரன் கணபதி என பச்சை குத்தப்பட்டிருந்தது என கூறினார்.

இதனை தொடர்ந்து அவரது உடல் பாகங்களை பார்த்து உறுதி செய்தனர்.

மேலும் சங்கர் நகர் பகுதியில் உள்ள மருத்துவர் வீடு மற்றும் சிலரது வீடுகளில் தங்கமணி வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த 28ஆம் தேதிக்கு பிறகு அவர் மீண்டும் வேலைக்கு வரவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து கொலையாளிகளை பிடிக்க சேலம் மாநகர கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர்கள் ரமலி ராமலட்சுமி அஸ்வினி, முரளி, இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், மணிவண்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

கொலையான தங்கமணியின் செல்போனில் 28ஆம் தேதி பேசிய நபர்களின் சந்தேகநபர் பட்டியல் எடுத்து அவர்களை தேடினர்.

இந்நிலையில் தங்கமணியின் சொந்த ஊரான மேட்டுப்பட்டி தாதனூர் அருகில் உள்ள சுக்கம் பட்டியை சேர்ந்த நந்தினி (27) என்பவர் சிக்கினார்.

இவரைப் பிடித்து விசாரித்த பொழுது தனது காதலனான சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த மாலிக் பாஷா (27) என்பவருடன் சேர்ந்து தங்கமணியை அரிசி பாளையத்தில் உள்ள சித்தி வீட்டிற்கு அழைத்துச் சென்று கொலை செய்ததும் அதனை மறைப்பதற்காக அவர்களது நண்பர் கோழி கடை வைத்திருக்கும் சிவராமன் (24) என்பவரை அழைத்து வந்து துண்டு துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மூட்டை கட்டி போட்டது தெரிய வந்துள்ளது.

நந்தினி தினமும் மேட்டுப்பட்டி தாதனூரில் இருந்து சேலத்திற்கு வீட்டு வேலைக்குச் செல்லும் தங்கமணி உடன் பழகியுள்ளார்.

பின்பு அவர் கழுத்தில் தங்கச் செயினும்ணும் காதில் தங்கத்தோடும் வளையல்களும் அணிந்திருந்த நிலையில் அந்த நகைகள் மீது ஆசை கொண்ட நந்தினி அதை பறிக்க தனது காதலன் மாலிக் பாஷாவுடன் திட்டமிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் படி 28ஆம் தேதி தங்கமணியிடம் நந்தினி பேசி அரிசி பாளையத்தில் இருக்கும் தனது சித்தி வீட்டு அருகே ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய ஆள் தேவைப்படுகிறது என்பதால் நீங்கள் வாருங்கள் என கூறி அழைத்துச் சென்று காதலன் மாலிக் பாஷா உடன் சேர்ந்து அடித்துக் கொன்று கொலை செய்துவிட்டு அவரது நகைகளை பறித்து சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட காதல் ஜோடி மற்றும் சிவராமன் ஆகிய மூன்று பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு தங்கமணியின் உடலை அவர்களது உறவினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

நான்கு பவுன் நகைக்காக பெண்ணை துண்டு துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *