Headlines

சாலையோரம் கிடந்த ரூ.3.80 லட்சம் : கருவூலத்தில் ஒப்படைத்த தேர்தல் பறக்கும் படையினர்

சாலையோரம் கிடந்த ரூ.3.80 லட்சம் : கருவூலத்தில் ஒப்படைத்த தேர்தல் பறக்கும் படையினர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விநியோகிப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, உரிய ஆவணங்களின்றி அதிக அளவில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் பெல்லம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலை ஓரத்தில் கேட்பாரற்ற நிலையில் ஒரு துணிப்பை கிடந்ததைப் பார்த்தனர்.

இதையடுத்து, பறக்கும் படை அதிகாரி முருகேஸ்வரன் அந்தத் துணிப்பையை எடுத்து சோதனை செய்தார். அதில் கட்டுக்கட்டாக ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3.80 லட்சம் பணம் தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அந்தப் பணம் உரிய நடைமுறைகளின்படி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து, கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சாலை ஓரத்தில் கேட்பாரற்று கிடந்த துணிப்பையில் ரூ.3.80 லட்சம் பணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *