புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த கலைமதி (25) என்பவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தையும், குளத்தூர் தாலுகா செனையக்குடி கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்பவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளன.
இந்நிலையில், குழந்தைகள் வார்டில் பணியில் இருந்த செவிலியர் தையல்நாயகி என்பவர், கலைமதிக்கு பிறந்த பெண் குழந்தையை வித்யாவின் குழந்தை என தவறாக எண்ணி, அடையாள எண் அணிவித்து வித்யாவின் உறவினர்களிடம் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, வித்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அறிந்த செவிலியர், தான் செய்த தவறை உணர்ந்து அவசர அவசரமாக வித்யா உறவினர்களிடம் கொடுத்த பெண் குழந்தையை திரும்பப் பெற்று அடையாள எண்ணை மாற்றி, இரு குடும்பத்தினரிடமும் குழந்தைகளை முறைப்படி ஒப்படைத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கலைமதியின் உறவினர்கள், தங்களுக்கு பிறந்தது ஆண் குழந்தை தான் எனக் கூறி மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த புதுக்கோட்டை நகர காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ், மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அறிவுறுத்தினார். முதற்கட்ட விசாரணையில், குழந்தை பிறந்த உடனே தாய்மார்களிடம் காண்பிக்கப்பட்டதாகவும், செவிலியரின் கவனக்குறைவாலே இந்த குழப்பம் ஏற்பட்டது என்பதும் தெரியவந்தது.
பின்னர்
மருத்துவமனைக்கு வந்த புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, கலைமதியின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செவிலியரின் கவனக்குறைவால் குழந்தைகளை மாற்றி காண்பித்துள்ளனர் கலைமதியின் குடும்பத்தினர் கலைமதிக்கு பிறந்தது ஆண் குழந்தை என்று நம்புகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த தான் மருத்துவர் என்ற முறையில் தேவையென்றால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளேன். படத்தில் தான் இது போன்ற காட்சிகளை பார்ப்போம். ஆனால் தற்பொழுது நிஜத்திலே தவெக ஆட்சியில் இது போன்ற சம்பவம் அரங்கேறி வருகிறது. இது முழுக்க முழுக்க கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் நடைபெற்றுள்ளது. இதே போல் தான் சட்டமன்றத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே டெங்கு காய்ச்சல் பற்றி கேள்வி எழுப்பினேன் அப்போது சபாநாயகர் அதெல்லாம் இல்லை அமருங்கள் என்று கூறினார்.
தற்போது டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றார்.
இரு தாய்மார்களும் தங்களது குழந்தைகளை பெற்றுக்கொண்ட போதிலும், கலைமதியின் குடும்பத்தினருக்கு சந்தேகம் இருந்தால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளலாம் என்றும், அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
