Headlines

உளுந்தூர்பேட்டையில் பிடிபட்ட கொள்ளை கும்பல் : கோவை போலீசாரிடம் ஒப்படைப்பு

உளுந்தூர்பேட்டையில் பிடிபட்ட கொள்ளை கும்பல் : கோவை போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவையில் தொழிலதிபரிடம் 1.6 கோடி ரூபாய் கொள்ளையடித்துவிட்டு உளுந்தூர்பேட்டை வழியாக தப்பிச்சென்ற 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை உளுந்தூர்பேட்டை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரணைக்காக கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நான்கு பேரும் காரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் போலீசாரின் துரித நடவடிக்கையால் 1.6 கோடி ரூபாய் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் மர்ம கும்பல் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப்பணம் கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளது. இது குறித்து கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். கொள்ளை கும்பல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வழியாக தப்பிச் செல்வதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைக்கு தகவல் பரிமாறப்பட்டது.

தகவல் கிடைத்ததும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடி மற்றும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகள், எம்.எஸ்.தக்கா, ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு ஒவ்வொரு காராக நிறுத்தி தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை எம்.எஸ்.தக்கா அருகே ஜி.எஸ்.டி சாலையில் வேகமாக வந்த TN 37 CR 1532 என்ற பதிவெண் கொண்ட காரை உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அசோகன் தலைமையிலான போலீசார் மடக்கி நிறுத்தினர். காரில் இருந்த 4 பேரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசி உளறியதால் சந்தேகம் வலுத்தது.

உடனடியாக நான்கு பேரையும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கள்ளக்குறிச்சி எஸ்.பி ஷஹ்னாஸ் நேரடியாக விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் கோவையில் தொழிலதிபரிடம் 1.6 கோடி ரூபாய் பணம் கொள்ளையடித்துவிட்டு தப்பி வந்த கும்பல் என்பது உறுதியானது.

இதையடுத்து காருடன் 4 பேரையும் மேல் விசாரணைக்காக கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு நான்கு பேரும் காரில்
கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *