திருநெல்வேலியில் ஜைனர்களின் பர்யுஷண் பர்வ புனித விழா மகாவீர் சுவாமி திருவுருவத்துடன் ரதயாத்திரை விமர்சையாக நடைபெற்றது.ஜெயின மத ஆண்களும் பெண்களும் புனித பாரம்பரிய உடை அணிந்து ரத ஊர்வத்தில் பங்கேற்றனர்.
திருநெல்வேலியில் ஜெயின் சமூகம் சார்பில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வரும் பர்யுஷண் பர்வ புனித விழா பக்தி மற்றும் ஆன்மிக உணர்வுடன் நடைபெற்று வருகிறது. ஜைன மதத்தின் முக்கியமான புனித விழாக்களில் ஒன்றான பர்யுஷண் பர்வ எனப்படும் நிகழ்ச்சி, சுயக்கட்டுப்பாடு, தவம், பிரார்த்தனை, சுயபரிசோதனை மற்றும் மனத் தூய்மையை வலியுறுத்தும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. விழா நாட்களில் ஜைனர்கள் பிரதிக்ரமண் எனப்படும் சுயபரிசோதனை வழிபாடு, சுவாத்யாயம் எனப்படும் சமய நூல் வாசிப்பு, பிரார்த்தனை மற்றும் பக்தி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி ஜைன் சங்கம் சார்பில் சிறப்பு ரதயாத்திரை நெல்லை டவுனில் நடைபெற்றது . அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பகவான் மகாவீர் சுவாமியின் திருவுருவம் மற்றும் குழந்தை வடிவிலான திருவுருவம் தொட்டிலில் அமர்த்தப்பட்டு, அமைந்துள்ள ஜெயின் கோவில் முன்பிருந்து ரத யாத்திரை தொடங்கியது. தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் பக்தி முழக்கங்கள் மற்றும் பாடல்களுடன் மேளதாளம் முழங்க நடைபெற்ற ஊர்வலத்தில் ஜைன மத ஆண்களும் பெண்களும் புனித பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர் .
இதில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர் மற்றும் பெண்கள் மத வழிபாட்டு முறைப்படி அரிசி தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் ஊர்வலத்தை வரவேற்று மகா ஆரத்தி நடத்தினர் ஊர்வலம் நான்கு ரத வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.
