Headlines

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு கேஸ் சிலிண்டர் நிறுத்தம்; மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு கேஸ் சிலிண்டர் நிறுத்தம்; மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு

கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி அருகே வடிவேலம்பாளையத்தில், கடந்த 50 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் இட்லி வழங்கி வரும் 85 வயது கமலாம்பாள் பாட்டிக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த இரண்டு மாதங்களாக கிடைக்காததால், அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கமலாம்பாள் பாட்டி பல ஆண்டுகளாக முதலில் 50 பைசாவுக்கும், தற்போது ஒரு ரூபாய்க்கும் இட்லி விற்பனை செய்து வருகிறார். ஏழை தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் பசியைப் போக்கும் வகையில், லாப நோக்கமின்றி இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறார். அவரது சமூக சேவையை கருத்தில் கொண்டு, சமையலுக்குத் தேவையான அரிசி, உளுந்து உள்ளிட்ட பொருட்களையும் சிலர் வழங்கி வந்தனர்.

காஸ் சிலிண்டர் கிடைக்கும் காலங்களில் தினமும் சுமார் 600 முதல் 700 இட்லிகள் வரை தயாரித்து விற்பனை செய்து வந்ததாக கமலாம்பாள் பாட்டி தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்காததால் இட்லி தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்த கமலாம்பாள் பாட்டி, மீண்டும் தடையின்றி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ இலவச கேஸ் சிலிண்டர் கொடுக்கவில்லை என்றால் என்னால் இட்லி சுட முடியாது. இரண்டு மாதமாக கேஸ் இல்லாமல் இட்லி சுட முடியவில்லை. கேஸ் வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். கேஸ் வந்தால்தான் மீண்டும் இட்லி சுட முடியும்” என்றார்.

மேலும், “50 ஆண்டுகளாக இதை செய்து வருகிறேன். முதலில் 50 பைசாவுக்கு இட்லி கொடுத்தேன். இப்போது ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறேன். கேஸ் இருந்தபோது தினமும் 600, 700 இட்லி வரை சுடுவேன். இப்போது கேஸ் இல்லாததால் சுடவே முடியவில்லை” என்று தெரிவித்தார்.

இட்லி கிடைக்காததால் ஏழை மக்கள் சிரமப்படுவதாகவும் அவர் கூறினார். “ஒரு ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்வோம் என்று மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். இப்போது இட்லி சுட முடியாததால் அவர்களும் சங்கடப்படுகிறார்கள்” என அவர் தெரிவித்தார்.

பாட்டி, கொரொனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் தனது சொந்த காசில் சிலிண்டர் வாங்கி வந்துள்ளார்.
பாட்டியின் சேவை கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகிற்கு தெரியத்தொடங்கியவுடன்,
பாட்டிக்கு ஒரு சில கேஸ் நிறுவனங்கள் முதலிரண்டு மாதங்கள். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக சிலிண்டர் வழங்கியுள்ளனர். பின்னர் நிறுத்திவிட்டனர். கேஸ் ஏஜென்சி எடுத்தவர் கடந்த 6 ஆண்டுகளாக, மாதம் 3 சிலிண்டர் வீதம் இலவசமாக கொடுத்து வந்துள்ளார். தற்போது இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்கி வந்தவர் வழங்கவில்லை என்றும், இதுகுறித்து எம்.எல்.ஏ.விடம் பேசுமாறு தெரிவித்ததாகவும் கமலாம்பாள் பாட்டி கூறினார்.

ஏழை, எளிய மக்களுக்காக பல ஆண்டுகளாக குறைந்த விலையில் உணவு வழங்கி வரும் 85 வயது மூதாட்டியின் கோரிக்கையை பரிசீலித்து, அவரது சமையல் பணிக்கு தேவையான இலவச எரிவாயு சிலிண்டர் தொடர்ந்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *