கோவை அருகே உற்பத்தியாகி கரூரில் காவிரி ஆற்றில் கலக்கும் காஞ்சி மாநதி எனும் நொய்யல் ஆறு திருப்பூர் நகர் பகுதியில் பிரதானமாக கடந்து செல்கிறது.
நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் மற்றும் வீட்டு கழிவுகள் உள்ளிட்டவை தொடர்ந்து கலக்கப்பட்டு வரும் நிலையில் நொய்யல் ஆறு மாசடைந்த தண்ணீராக மட்டுமே உள்ளது. இந்த கழிவு நீர் காவிரி ஆற்றிலும் கலக்கிறது. இதனை தடுக்க சாயக்கழிவுகளை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு ஜீரோ டிஸ்சார்ஜ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் பல சாய ஆலைகள் சாயக்கழிவுகளை முறைகேடாக நொய்யல் ஆற்றில் கலக்கின்றனர்.
அதேபோல மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாக்கடை கழிவுநீர் நேரடியாக நொய்யல் ஆற்றல் கலக்கப்படுகிறது.
தொடர் கழிவு நீர் கலப்பு காரணமாக நொய்யல் ஆற்று நீர் நுரை பொங்கி காணப்படுகிறது. மேலும் ஆற்றின் அருகே செல்லும் போதே கடும் துர்நாற்றம் வீசி முகம் சுழிக்கும் அவல நிலை உள்ளது.
அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் மற்றும் சாயக் கழிவு கலப்பை முற்றிலும் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
