Headlines

நெருங்கும் வடகிழக்கு பருவமழை : அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

நெருங்கும் வடகிழக்கு பருவமழை : அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கால்வாய் தூர்வாரும் பணிகளை வரும் அக்டோபர் 2-வது வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுப்பது மற்றும் மழைநீரை சீராக வெளியேற்றுவது தொடர்பாக பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக, பொதுப்பணித்துறையின் நீர்ப்பாசனப் பிரிவின் சார்பில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு உப்பனாறு, கருவடிக்குப்பம், கோரிமேடு உள்ளிட்ட முக்கிய கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவுறுத்தினார்.

குறிப்பாக, இந்தப் பணிகள் அனைத்தையும் அக்டோபர் மாதம் 2-வது வாரத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

தூர்வாரும் பணிகள் நிறைவடைந்த பின்னர் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் கால்வாய்களின் நிலைமை மற்றும் நீர்வழித்தடங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதனிடையே, அண்மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அவற்றுக்கான திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பது மற்றும் பணிகளை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பருவமழைக்கு முன்பாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், நடைபெற்று வரும் பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், உதவிப் பொறியாளர்கள் மதிவானன், லுயி பிரகாசம், ஸ்ரீநாத் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *