நெல்லை வி.எம்.சத்திரம் பகுதியில் பிரியாணி கடை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விநாயகர் படம் இடம்பெற்றிருந்தது தொடர்பாக, மத உணர்வை புண்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை நரசிங்கநல்லூர் பிள்ளைமார் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (42) என்பவர் பில்டராக உள்ளார். இவர் கடந்த 12-ம் தேதி காலை வி.எம்.சத்திரம் மேம்பாலம் அருகே சென்றபோது, அப்பகுதியில் செயல்பட்டு வரும் திண்டுக்கல் கல்யாண பிரியாணி கடை முன்பு வைக்கப்பட்டிருந்த பேனரை பார்த்துள்ளார்.
அந்த பேனரில் விநாயகர் பிரியாணி செய்வது போன்ற படம் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த செல்வராஜ் அதிர்ச்சி அடைந்ததுடன், இந்துக்கள் வழிபடும் விநாயகரை அவமதிக்கும் வகையிலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி செல்வராஜ், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பேனர் வைக்கப்பட்டதன் பின்னணி, அதன் நோக்கம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக கே.டி.சி. நகரைச் சேர்ந்த முருகையாவின் மகனும், சம்பந்தப்பட்ட பிரியாணி கடையின் உரிமையாளருமான ஜெயந்த் (30) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் படம் இடம்பெற்ற பிரியாணி கடை பேனர் தொடர்பாக மத உணர்வை புண்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டு, கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
