மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவது அவர்களின் கொள்கை அடிப்படையிலான முடிவு என்றும், இதனால் தவெகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்றும் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மக்களின் வரிப்பணம் சிந்தாமல், சிதறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து திட்டங்களும் மக்களைத் தேடிச் செல்லும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சாதி, மத பாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அண்ணா, எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவுகளை நிறைவேற்றும் வகையில், முதல்வர் தொலைநோக்கு திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறார். அரசு சிறப்பான வெற்றியை பெற்று நல்லாட்சியை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து வசூலிக்கப்பட்டு வந்த நிலவரி தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள். நிலவரி ரத்து செய்யப்பட்டதால் அரசுக்கு சுமார் ரூ.28 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்பு ஜமாபந்தி நடைபெறும் காலங்களில் நிலவரி வசூலிப்பது வருவாய்த்துறைக்கு மிகப்பெரிய பணியாக இருந்தது. அந்த காலகட்டத்தில் நிலவரி முக்கியமான வருவாய் ஆதாரமாக இருந்தது. தற்போது கட்டிடவரி, குடிநீர் வரி, உள்ளாட்சி வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் வசூலிக்கப்படுவதால் நிலவரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
வருவாய்த்துறையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. துறைக்கு தேவையான அதிநவீன கருவிகள் வாங்கப்பட உள்ளன.
வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நில அளவையர்கள் பற்றாக்குறையை போக்குவதற்காக புதிய நில அளவையர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் நில அளவைப் பணிகளை விரைவுபடுத்துவதுடன், பொதுமக்களுக்கு பட்டா உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த ஆவணங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பஞ்சமி நிலங்களைப் பொறுத்தவரையில், விதிமுறைகளுக்கு உட்பட்டு அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வதற்கான உரிமை தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருவாய்த்துறையின் செயல்பாடுகளை மேலும் நவீனப்படுத்தி, பொதுமக்களின் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சில அத்தியாவசிய பொருட்கள் கூடுதலாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலம் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளின் நிலை முன்பைவிட பல மடங்கு உயர்ந்துள்ளது. அனைவரும் அனைத்தையும் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “அவர்களுடைய கொள்கையின் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்கிறார்கள். அதனால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை” என்றார்.
முதல்வரின் லண்டன் பயணம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “அவரவர்கள் ஒவ்வொன்றைச் சொல்வார்கள். சொல்வது எளிது. ஆனால் செயல்படுத்திப் பார்ப்பது கடினம்” என்றார்.
ஒரு தொழில் தொடங்குவதற்கு மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும். தொழில் முதலீடுகளை கொண்டு வருவது குறித்து பேசுவது எளிதாக இருக்கலாம்; ஆனால் நடைமுறையில் அதை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பாகவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
பேட்டியின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் சுதாகர், வினோத்கண்ணா, சிந்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
