சேலத்தில் அழகு நிலையம் மசாஜ் சென்டர் நடத்தி வந்த வங்காளதேச பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்
ஐந்து வருடங்களுக்குப் பிறகு முக்கிய குற்றவாளியை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வின்சென்ட் பகுதியில் வங்காளதேச நாட்டை சேர்ந்த தேஜ் மோண்டல் என்பவர் நடேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் தங்கி அழகு நிலையம் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார்.
இவரிடம் வங்காளதேச நாட்டை சேர்ந்த லப்லு, நிஷி, ஷீலா, ஓஷி ஆகிய நான்கு நபர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அழகு நிலைய உரிமையாளர் தேஜ் மோண்டலை
மேற்கண்ட நால்வரும் தாக்கி படுகொலை செய்து விட்டு தலைமறைவாகினர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த நான்கு குற்றவாளிகளையும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி நிஷிரஃபி ஷேக்( 28) என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படையினர் முக்கிய குற்றவாளியை புனேவில் கைது செய்து சேலம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
மேலும் இவ் வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருக்கும் மூன்று குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
