மலம்புழா நீர்த்தேக்கப் பகுதியில் திடீரென காட்டு யானை ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து கொண்டிருந்த காலை நேரத்தில், நீர்த்தேக்கத்தை ஒட்டி காட்டு யானை முகாமிட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
மலம்புழா அணை மற்றும் நீர்த்தேக்கப் பகுதிக்கு அருகே உள்ள ஆனக்கல் பகுதியிலிருந்து நீர்த்தேக்கத்தை கடந்து வந்த காட்டு யானை, தெக்கே மலம்புழா பகுதியில் வந்து சேர்ந்தது.
கம்பீரமாக நடந்து வந்த காட்டு ஆண் யானை, நீர்த்தேக்கப் பகுதியில் சிறிது நேரம் சுற்றித்திரிந்ததுடன், அங்கேயே நிலை கொண்டது. இதனால் காலையில் மலம்புழா பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
யானை நீர்த்தேக்கப் பகுதியில் இருப்பது குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விரட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக RRT எனப்படும் Rapid Response Team குழுவினரும் சம்பவ இடத்தில் களமிறங்கினர்.
யானையை தொந்தரவு செய்யாமல், பாதுகாப்பான முறையில் காட்டுப்பகுதியை நோக்கி நகர்த்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மலம்புழா நீர்த்தேக்கப் பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இருக்கும் நேரத்தில் காட்டு யானை வந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் வனத்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
யானை மீண்டும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்கும் வகையில் அதன் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் யானையின் அருகே செல்லவோ, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்காக அதனை பின்தொடரவோ கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
