கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த இருவருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே திடீரெனக் கடுமையான கைகலப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கோவை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று வழக்கமான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. அப்போது நீதிமன்றத்திற்கு வந்த ஒரு தரப்பினர், தங்களுக்கு எதிரத்தரப்பைச் சேர்ந்தவர்களின் காரின் நான்கு சக்கரங்களிலும் இருந்த காற்றை திடீரென இறக்கிவிட்டு உள்ளனர்.
இதனைத் தற்செயலாகக் கண்ட வழக்கறிஞர் ஒருவர், காரின் காற்றைப் பிடுங்கிய இளைஞரிடமும் அவருடன் இருந்த பெண்ணிடமும் தட்டிக்கேட்டு விசாரித்து உள்ளார். அப்போது, அந்த இளைஞரும், பெண்ணும் வழக்கறிஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
உடனடியாக அந்த வழக்கறிஞர், இச்சம்பவம் குறித்துக் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளார். அதன் பேரில், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, பொது இடத்தில் காரின் காற்றைப் பிடுங்கியது குறித்து இருவரிடமும் விளக்கம் கேட்டு உள்ளனர்.
அப்போது, அந்தப் பெண், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளைச் மிகத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அங்கு இருந்த வழக்கறிஞர்கள் திரண்டு வந்ததால், இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் முற்றி திடீரெனக் கைகலப்பாக மாறியது.
மோதல் குறித்து வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சுதீஷ் அளித்த தகவலின் பேரில், பந்தய சாலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர்.
மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திய போலீசார், வழக்கறிஞர்களிடம் கைகலப்பில் ஈடுபட்ட அந்த இளைஞர் மற்றும் பெண் ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் இடையே, கோவை நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே வழக்கறிஞர்களுக்கும் விசாரணைக்கு வந்தவர்களுக்கும் இடையே காரசாரமான கைகலப்பு நடந்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
