விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடகா திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு ஏற்கனவே உள்ள பற்றாக்குறை நீரை சரி கட்டும் விதத்தில் விகிதாச்சார அடிப்படையில் 22,000 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறந்து விட கோரிக்கை வைக்கப்பட்டது.
அவ்வாறு திறக்கும் பட்சத்திலேயே தமிழகத்திற்கு உரிய நீரான 28 டி எம் சி கிடைக்கப்பெறும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால் தமிழகத்தின் கோரிக்கையை கருத்தில் கொள்ளாமல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வெறும் 9000 கன அடி வீதமாக 15 நாட்களுக்கு திறப்பதற்கு உத்திரவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு காவிரி நீரை மடைமாற்றம் செய்து பாசன கால்வாய் மூலமாகவும் தடுப்பணைகள் மூலமாகவும் 20 டிஎம்சி தண்ணீரை எடுத்துள்ளனர்.
வறட்சி காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் நீரை திறக்க வேண்டும் என்று விதி இருக்க கூடிய நிலையில் அதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடைபிடிக்க முற்றிலும் தவறிவிட்டது.
குறிப்பாக கடந்த 27ஆம் தேதி நிலவரப்படி கர்நாடகா அணைகளில் 72.961 டிஎம்சி நீர் இருந்த போதும் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவை பிறப்பிக்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ஜூன் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்துக்கு 80.451 டிஎம்சி நீர் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது வரை கிடைத்திருக்கும் நீரின் அளவு 25 புள்ளி 598 டிஎம்சி மட்டுமே.
மேலும் வறட்சி காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டால் கூட தமிழகத்திற்கு 43. 202 டிஎம்சி நீர் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது வரை 25.598 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்துள்ளது. இவ்வாறு நீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த பாராபட்சமான உத்தரவை கூட கர்நாடக அரசு செயல்படுத்துவது இல்லை.
குறிப்பாக 9000 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று கடந்த 24ஆம் தேதி ஆணையம் உத்தரவிட்ட நிலையில் அதனை கர்நாடகம் கடைபிடிக்க தவறிவிட்டது.
இவ்வாறு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட மறுப்பதால் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர் குறுவை சாகுபடிக்கான நீரை கூட திறந்து விட முடியாத நிலையில் தமிழகம் உள்ளது.
எனவே தமிழகத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய நீரை திறந்து விட உரிய உத்தரவை உச்சநீதிமன்ற பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீர் 17.604 டி.எம்.சி.யை உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் அமல்படுத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
