கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே கோதையாற்றில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி வந்த ராட்சத முதலை இன்று வனத்துறையினர் விரித்திருந்த வலையில் சிக்கியது.
இந்த முதலை திற்பரப்பு, கடையாலுமூடு, செங்குழிக்கரை, களியல் உள்ளிட்ட கோதையாற்றுப் பகுதிகளில் அடிக்கடி தென்பட்டு வந்தது. இதனால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் திற்பரப்பு பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் இருந்தனர்.
முதலையைப் பிடிக்க வனத்துறையினர், சென்னை முதலைப்பண்ணை நிபுணர்கள் மற்றும் 12 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இப்பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆற்றின் கரையோரம் மற்றும் நடைமேம்பாலம் பகுதிகளில் தொடர்ந்து போக்கு காட்டி வந்த முதலை, இன்று காலை ஆற்றில் விரிக்கப்பட்டிருந்த சிறப்புப் பாதுகாப்பு வலையில் சிக்கியது. நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு வனத்துறையினர் முதலையை பாதுகாப்பாக வலையில் இருந்து மீட்டனர்.
பிடிபட்ட முதலையை மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காப்புக்காட்டுப் பகுதியில் உள்ள பாதுகாப்பான நீர்நிலையில் விடுவதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
7 மாதங்களாக அச்சுறுத்தி வந்த ராட்சத முதலை பிடிபட்டதையடுத்து கடையாலுமூடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
