காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கை வசந்தம் நகரை அடுத்துள்ள ஸ்ரீ அருள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவரது கணவர் மணிகண்டன் துபாய் நாட்டில் பணியாற்றி வருகிறார். பூங்கொடி தனது இரண்டு மகள்களுடன் இங்கு வசித்து வருகிறார். இவர் அருகிலுள்ள வசந்தம் நகர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக ஃபேன்ஸி கடை ஒன்றையும் நடத்தி வந்தார்.
நேற்று தனது கடையைக் காலி செய்யும் பணிகளுக்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற பூங்கொடி, சுமார் இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 24 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ₹50,000 ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, மாகரல் காவல்துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு வீடுகளின் கதவை உடைத்து சுமார் 15 சவரன் தங்க நகைகள் திருடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் தொடரும் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க, காவல்துறையினர் அப்பகுதியில் இரவு மற்றும் பகல்நேர ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளையில், பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மீதான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
