கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர், சகோதரி உயிரிழந்தனர். இறந்தவரின் மனைவி படுகாயமடைந்தார்.
வட்டவடா கொட்டக்கம்பூர் அம்மன் கோவில் அருகே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
கொட்டக்கம்பூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி சின்னு ஆகியோர் உயிரிழந்தனர். பாலகிருஷ்ணனின் மனைவி மாரியம்மா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வட்டவடாவில் மதியம் சுமார் 12 மணியளவில் தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்த நிலையில், விவசாய நிலத்தில் இருந்த மூவரும் மழையிலிருந்து தப்பிக்க அங்கிருந்த தற்காலிக ஷெட்டுக்குள் சென்றுள்ளனர்.
அப்போது அருகிலிருந்த உயரமான சரிவுப் பகுதியில் இருந்து மண் மற்றும் கற்கள் திடீரென சரிந்து ஷெட்டின் மீது விழுந்துள்ளன. இதில் மூவரும் மண்ணுக்குள் சிக்கினர்.
உள்ளூர் மக்கள் முதற்கட்டமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், பின்னர் மூணாறிலிருந்து தீயணைப்புப் படையினரும் தேவிகுளத்திலிருந்து போலீசாரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நடைபெற்ற மீட்புப் பணிக்குப் பின்னர் மூவரும் வெளியே கொண்டுவரப்பட்டனர். ஆனால் பாலகிருஷ்ணனும் சின்னுவும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மாரியம்மா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்..
கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் தொடர்ந்து மண்சரிவு அபாயம் நிலவி வருகிறது. இதனால் வட்டவடா, மூணாறு மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், தேவையின்றி ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கேரளாவில் மழை எச்சரிக்கை
செப்டம்பர் 20-ஆம் தேதி கேரளாவின் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு, கண்ணூர் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 20 முதல் 24 வரை சில பகுதிகளில் கனமழைக்கும், செப்டம்பர் 20–21 தேதிகளில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக வட்டவடா பகுதியில் ஏற்பட்ட இந்த இரட்டை உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
