திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் இளவழகன்(வயது 40). இவருடைய மனைவி வளர்செல்வி(35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இளவழகன் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் இளவழகன் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாஸ்கோ நகரில் குடிபெயர்ந்தார்.
வளர்செல்வி அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்த திருப்பூர் வெங்கடேஸ்வரா வீதியை சேர்ந்த வீரமணி(40) என்பவருடன் வளர்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதைத்தொடர்ந்து வீரமணி அடிக்கடி, வளர்செல்வியை சந்திக்க அவருடைய வீட்டுக்கு வந்து சென்றார். அதை அறிந்த இளவழகன், தனது மனைவி வளர்செல்வி மற்றும் வீரமணியை கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் தங்கள் சந்திப்பை கைவிடவில்லை. இதனால் வளர்செல்விக்கும், இளவழகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 18-3-2019 அன்று இரவு இளவழகன் வீட்டுக்கு வீரமணி வந்தார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வீரமணி கத்தியால் இளவழகனின் நெஞ்சில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
இதுகுறித்து வடக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால், வளர்செல்வியும், வீரமணியும் சேர்ந்து திட்டமிட்டு இளவழகனை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வளர்செல்வியையும், வீரமணியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. கொலை குற்றத்துக்காக வீரமணி, வளர்செல்வி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.
