திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி ஆண்டி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் 43.
கால்நடைகளை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு விஜயலட்சுமி என்பவருடன் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஆண் பெண் என 4 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக பெருமாள் தனது நிலத்தை அடமானம் வைத்து சில தினங்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் கடனாக பெற்றதாக சொல்லப்படுகிறது.
அதில் ரூ.4 லட்சத்தை பல்வேறு சில்லறை கடன்களை அடைப்பதற்காக செலவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மீதமிருந்த ரூ.11 லட்சத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 10-ம் தேதி அமாவாசையை முன்னிட்டு பெருமாள் தனது குடும்பத்தினருடன் புதுர்நாடு மலையில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பெருமாளின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கோவிலுக்கு சென்றுவிட்டு மறுநாள் வீட்டிற்கு திரும்பிய பெருமாள் வீட்டின் கதவு திறந்து கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது.
பீரோவில் வைத்திருந்த ரூ.11 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிந்து சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விவசாயி வீட்டில் ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
