Headlines

உயிரிழந்த விவசாயிகுடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் : தமிழக அரசிடம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

உயிரிழந்த விவசாயிகுடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் : தமிழக அரசிடம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கூட்டுறவுத் துறை ஊழியர்கள், கடன் வசூல் என்ற பெயரில் விவசாயிகளுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்தார்.

திருச்சி, சமயபுரம் அருகே பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 5 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

மேலும், பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாவிட்டால், இதே இடத்தில் மீண்டும் தொடர் காத்திருப்பு போராட்டத்துடன் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்டம் வாங்கல் அருகேயுள்ள முனியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி, 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் வாகனத்தில் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கந்தசாமிக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடல் சொந்த ஊரான முனியப்பனூருக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் சக விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கந்தசாமியின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற விவசாயி உயிரிழந்த சம்பவம், சக விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில்:

கூட்டுறவுத் துறை ஊழியர்கள், கடன் வசூல் என்ற பெயரில் விவசாயிகளுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும், நெரூர் வடபாகம் கூட்டுறவு சங்க ஊழியர்கள் விவசாயிகளுக்கு தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து மிரட்டுவதாகவும் ஈசன் முருகசாமி குற்றம்சாட்டினார்.

மேலும், விவசாயிகளின் வீடுகளுக்கு பலரை அழைத்து வந்து கடனை உடனடியாக செலுத்துமாறு நெருக்கடி கொடுப்பதாகவும், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே ரசீதுகளை வழங்கி பணம் செலுத்த வற்புறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயம் நஷ்டத்தில் உள்ள நிலையில், கடன் தள்ளுபடி தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், இதுபோன்ற வசூல் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை எனவும் ஈசன் முருகசாமி கூறினார்.

மேலும், கடன் நெருக்கடியால் உயிரிழந்ததாக கூறப்படும் கந்தசாமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *