திருச்சி பிராட்டியூர் கோரையாறு கரையில் சுற்றித்திரிந்த 8 அடி நீள முதலையை மீட்டு கல்லணை காவிரி ஆற்றில் வனத்துறையினர் பாதுகாப்பாக விடுவித்தனர்.
திருச்சி மாவட்டம், பிராட்டியூர் அருகில் உள்ள கோரையாற்று கரையில் முதலை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள், வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்து இருந்தனர்.
இத்தகவலின் அடிப்படையில், மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம் தலைமையிலான வனத்துறைக் குழுவினர் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தொடர்ந்து, திருச்சி மாவட்ட தீயணைப்புத் துறையினருடன் இணைந்து கோரையாற்றுக் கரை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு அங்கு சுற்றித் திரிந்த சுமார் 8 அடி நீளம் கொண்ட பெரிய முதலையை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து பாதுகாப்பாகப் பிடித்தனர்.
பின்னர், அந்த முதலை கல்லணை காவிரி ஆற்றுப் பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் ஏதேனும் முதலைகள் தென்பட்டால், அவற்றை எந்தவிதமான துன்புறுத்தலுக்கும் ஆளாக்காமல் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என, மாவட்ட வன அலுவலர் கிருத்திகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
