Headlines

கடன் வழங்க ரூ.500 லஞ்சம் கேட்டதாக புகார்: கூட்டுறவுச் சங்க ஊழியர்களிடம் பெண்கள் வாக்குவாதம்

கடன் வழங்க ரூ.500 லஞ்சம் கேட்டதாக புகார்: கூட்டுறவுச் சங்க ஊழியர்களிடம் பெண்கள் வாக்குவாதம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் முனைவென்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடன் பெற வந்த பெண்களிடம் ரூ.500 கூடுதல் பணம் கேட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பெண்கள் சங்க ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

முனைவென்றி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கறவை மாடு மற்றும் விவசாயக் கடன்களைப் பெறுவதற்காக கூட்டுறவு சங்கத்தை அணுகியுள்ளனர். அப்போது, கடன் நடைமுறைக்காக தனியாக ரூ.500 செலுத்த வேண்டும் என ஊழியர்கள் கேட்டதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் அதிருப்தியடைந்த பெண்கள், ஊழியர்களிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசின் கடன் உதவியைப் பெறுவதற்கு தனியாக ரூ.500 வழங்க வேண்டுமெனில், அதற்கான முறையான ரசீதை வழங்க வேண்டும் எனக் கூறி, கையில் பணத்தை நீட்டியபடி கேள்வி எழுப்பினர்.

பெண்கள் வீடியோ பதிவு செய்வதைப் பார்த்த ஊழியர்கள் பணத்தைப் பெற மறுத்ததாகவும், இதனால் ஆவேசமடைந்த பெண்கள், “நியாயமாகப் பணம் வாங்குவதாக இருந்தால் ரசீது கொடுத்து வாங்குங்கள்” எனக் கூறி வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த சங்கத்தின் மூலம் 100-க்கும் மேற்பட்டோருக்கு கடன் வழங்கப்படுவதாகவும், ஒவ்வொருவரிடமும் ரூ.500 வீதம் வசூலிக்கப்பட்டால் பெருமளவில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் பெண்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

“பணம் கொடுக்கவில்லை என்பதற்காக கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும் அலைக்கழிக்கிறீர்களா?” எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஊழியர்கள், “நாங்கள் பணம் வாங்கவில்லை; கடனைச் செலுத்துங்கள்” எனக் கூறியதாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பெண்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசின் கடன் திட்டங்களில் முறைகேடான கட்டணங்கள் அல்லது லஞ்சக் கோரிக்கைகள் உள்ளதா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *