Headlines

கோவை to உளுந்தூர்பேட்டை : அலர்ட் செய்யப்பட்ட போலீசார் , அகப்பட்ட கொள்ளையர்கள்

கோவை to உளுந்தூர்பேட்டை : அலர்ட் செய்யப்பட்ட போலீசார் , அகப்பட்ட கொள்ளையர்கள்

கோவை: கோவை லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் ரூ.1.06 கோடி ரொக்கப் பணம் இருந்த பையைப் பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்ற நான்கு பேரை, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அவிநாசி சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை பந்தய சாலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்தில் வந்து இறங்கிய நபர்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (61). அவரது உறவினர் ஆந்திராவில் நகைக் கடை நடத்தி வருவதாகவும், அந்தக் கடைக்காக கோவையில் உள்ள நகை தயாரிப்பாளர்களிடம் இருந்து தங்க நகைகளை வாங்கி வருவது வழக்கம் என்றும் போலீஸாரிடம் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக ஆண்டுக்கு இருமுறை கோவை வந்து நகைகளை வாங்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், நகைகள் வாங்குவதற்காக ரூ.1 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணத்துடன் ரங்கசாமி நேற்று (செப்டம்பர் 5) கோவைக்கு வந்துள்ளார்.

பேருந்தில் வந்து லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே இறங்கிய அவர், அங்கிருந்து கோவையில் உள்ள நகை தயாரிப்பாளர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் கோவைக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சில நிமிடங்களில் நடந்த வழிப்பறி

ரங்கசாமி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, சொகுசு காரில் வந்த நான்கு பேர் அவரை நெருங்கியதாகக் கூறப்படுகிறது.

சற்றும் எதிர்பாராத நிலையில், அவர்கள் ரங்கசாமியின் தோளில் இருந்த பையைப் பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பையில் நகைகள் வாங்குவதற்காக கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 6 லட்சம் ரொக்கப் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காரில் வந்தவர்கள் அவிநாசி சாலை வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ரங்கசாமி உடனடியாக கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சிகள் மூலம் தேடுதல்

புகாரைப் பெற்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும், வழிப்பறி நடந்த இடம் முதல் கும்பல் தப்பிச் சென்ற பாதை வரையிலான சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்ததனர்.

மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.

கும்பல் பயன்படுத்தியதாகக் கூறப்படும் காரின் எண்ணை அடையாளம் கண்ட போலீஸார், அந்த வாகனம் சென்ற பாதையைத் தொடர்ந்து கண்காணித்தனர். திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உளுந்தூர்பேட்டையில் சிக்கிய கும்பல்

இதற்கிடையே, கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் வழியாகச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

மாடூர் சுங்கச்சாவடி மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.எஸ். தக்கா உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை போலீஸார் மடக்கி நிறுத்தி சோதனையிட்டனர்.

காரில் இருந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்களது பதில்களில் முரண்பாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1.06 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரணை

இந்தச் சம்பவத்துக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா, ரங்கசாமி அதிக அளவு பணத்துடன் கோவைக்கு வருவது குறித்து கும்பலுக்கு தகவல் சென்றது எப்படி, சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட கோணங்களிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பிடிபட்டவர்களின் பின்னணி மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் தங்கதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், பணத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படும் நபர்கள் உளுந்தூர்பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

விசாரணை முடிவடைந்த பின்னர் வழிப்பறி சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், பேருந்தில் இருந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே ரூ.1.06 கோடி பணத்துடன் இருந்த நபரிடம் கார் மூலம் வந்த கும்பல் வழிப்பறி செய்ததும், சில மணி நேரங்களிலேயே அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே சிக்கியிருப்பதும் இந்தச் சம்பவத்தில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *