“நமது குளம், நமது பொறுப்பு, நமது பெருமை” என்ற முழக்கத்துடன், கோவை குறிச்சி குளத்தில் ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders Foundation) அமைப்பின் தன்னார்வலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை முதல் தீவிரத் தூய்மைப் பணியில் ஈடுபட்டு, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றினர்.
குறிச்சி குளத்தில் குவிந்த மது பாட்டில்கள்:
கோவை மாநகரின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான குறிச்சி குளத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் இந்தத் தூய்மைப் பணி முன்னெடுக்கப்பட்டது. ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தூய்மை இயக்கத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இன்று காலை முதலே குளத்தின் கரைப் பகுதிகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களில் தூய்மைப் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்ட போது குப்பைகளுடன் மது பாட்டில்கள் குவிந்து கிடந்தது. அவர்கள் அவற்றை அங்கிருந்து அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
போதை கலாச்சாரத்திற்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை:
இத்தூய்மைப் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பேசிய அமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கூறியதாவது:
”தமிழகத்தில் போதைக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு அருகில் இதற்கெனத் பிரத்யேகக் காவல் பிரிவை அமைத்துத் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.
வெறும் குற்றவாளிகளை மடைமாற்றம் செய்வதால் மட்டும் போதை ஒழிப்பு என்பது சாத்தியமாகாது.
இதற்கு அரசு இன்னும் கூடுதல் கவனத்துடன் கூடுதல் தீவிரமாகச் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
எல் நினோ (El Nino) எச்சரிக்கை:
மேலும் பேசிய அவர்கள், “வரும் காலங்களில் எல் நினோ (El Nino) மற்றும் இசட் நினோ (Z Nino) போன்ற பருவநிலை மாற்றங்களால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்போதே நமது நீர்நிலைகளைப் பாதுகாக்காமல் விட்டால், எதிர்காலத்தில் நாம் பெரும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அவதிக்கு உள்ளாக வேண்டிவரும்” என தெரிவித்தனர்.
