கோவை மாநகர பகுதியில் கடந்த 8 மாதங்களில் குற்றச்செயலில் ஈடுபட்ட 117 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
கோவை மாநகரப் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர்கள் கார்த்திகேயன், தங்கதுரை மேற்பார்வையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் 24 மணி நேரம் ரோந்து திட்டத்தில் உள்ள காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுடன், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கோவை மாநகரப் பகுதியில் குற்றச்சம்பங்கள் வெகுவாக குறைந்து உள்ளது.
இது தவிர தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு 6 மாதம் கோவை மாநகரப் பகுதிக்குள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இதுவரை 60 க்கும் மேற்பட்ட ரவுடிகள் மாநகரத்தை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். அது போன்று சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாநகரப் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை ரவுடிகள் உட்பட பலர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்து உள்ளது.
கோவை மாநகரப் பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை குற்றச்செயல்களில் ஈடுபட்ட 54 பேர், போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த 44 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 7 பேர், ரேஷன் அரிசி கடத்தலில் 8 பேர் என மொத்தம் 117 பேர் மீது குண்டர் தரப்பு சட்டம் பாய்ந்து உள்ளது.
கோவையைச் சேர்ந்த குரு பாலாஜி (22) தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளிக் கூடம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது நேற்று குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்து உள்ளது என்றும் கூறினர்.
