சென்னை நீலாங்கரை அருகே முதலமைச்சரின் கான்வாய் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் வாகனங்களை போலீசார் நிறுத்தி வைத்திருந்த நிலையில், நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் வடக்கு 3-வது பிரதான சாலையைச் சேர்ந்த விஷால் (18) என்ற இளைஞர் அதிவேகமாக வந்துள்ளார்.
வாகனத்தின் பின் பகுதியில் ‘நம்பர் பிளேட்’ இல்லாததாலும், ஹெல்மெட் அணியாமல் வந்ததாலும், போலீசாரைப் பார்த்த பயத்தில் அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகத் தெரிகிறது.
போலீசார் மறித்தும் நிறுத்தாமல் வழிந்து வழிந்து சென்ற இளைஞரை உடனடியாக மடக்கிப் பிடித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில், ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக வாகனம் ஓட்டியது மற்றும் வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் சென்றது தெரியவந்தது.
இளைஞருக்கு 8,000 அபராதம் விதிக்கப்பட்டு, இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என தீவிர எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கப்பட்டார்.
