Headlines

அன்பில் மகேஸ் உறவினர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

அன்பில் மகேஸ் உறவினர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

​தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உறவினர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர்.

​கடந்த திமுக ஆட்சியில் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகவும் வகித்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் இவர் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், இவரது பதவிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்ததில் நிதி முறைகேடு மற்றும் லஞ்சம் பெறப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

​இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுமருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த வாளாடி கார்த்திக் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இவர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நெருங்கிய உறவினர் எனக் கூறப்படுகிறது.​இன்று காலை 11:30 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனையில் 10-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டனர்.

சுமார் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சோதனை மதியம் நிறைவடைந்தது. சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.

​முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் நடைபெற்ற இந்தத் திடீர் சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *