நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்வி சமத்துவத்தை வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ.) சார்பில் கோவையில் நேற்று மாலை கண்டனப் பேரணி நடைபெற்றது.
காந்திபுரம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் அருகே தொடங்கிய இந்தப் பேரணிக்கு எஸ்.எப்.ஐ. அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம் சஜி, டி.ஒய்.எப்.ஐ. மாநில துணைத்தலைவர் முகேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை (என்.டி.ஏ.) கலைக்க வேண்டும் மற்றும் சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
இதில் எஸ்.எப்.ஐ. மற்றும் டி.ஒய்.எப்.ஐ. அமைப்புகளைச் சேர்ந்த கோவை மண்டல நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் திரளாகப் பங்கேற்றனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் எஸ்.எப்.ஐ. அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம். சஜி கூறியதாவது:
நீட் தேர்வு முறையின் குளறுபடிகளாலும், அரசின் மெத்தனப் போக்கினாலும் மாணவி அனிதா தற்கொலைக்கு தள்ளப்பட்டார். “அவர் கல்வி உரிமைக்கான தியாகி”.
இன்று தேசிய தேர்வு முகமையானது, மாணவர்களை வதைக்கும் முகமையாக மாறிவிட்டது. தொடர் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மத்திய பா.ஜ.க. அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கிறது.
ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை; மறுபுறம் கல்வி தனியார்மயமாகி வருகிறது.
நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யும் வரையிலும், என்.டி.ஏ. அமைப்பைக் கலைக்கும் வரையிலும் மாணவர்களின் இந்த அறப்போராட்டம் ஓயாது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களுக்கு தமிழக அரசும் ஆதரவாக நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
