திமுகவினர் தன்னைப் பற்றியும், தன்னைச் சார்ந்தும் தனிமனித தாக்குதல்களை முன்வைத்து வருவதாக தமிழ்நாடு வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“தனிமனித தாக்குதல் என்பது திமுகவினருக்கு எப்போதுமே கைவந்த கலை. ஒரு வேட்பாளராக மக்களிடம் வாக்கு கேட்கும்போது, இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, மக்களுக்கு என்னென்ன திட்டங்களை செய்துள்ளது என்பதை எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு தனிமனித தாக்குதல்களை முன்வைப்பது ஏன்?
‘சத்தியபாமா’ என்ற பெயரே வெற்றியைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
விவசாயிகள் மத்தியில் குறைவான வரவேற்பு இருப்பதால் வெற்றி வாய்ப்பு பாதிக்குமா என்று கேட்கிறார்கள். அதனால் வெற்றி வாய்ப்பில் எந்தப் பாதிப்பும் இருக்காது. மக்கள் நல்ல திட்டங்களின் அடிப்படையில்தான் முடிவெடுப்பார்கள். எந்த ஆட்சியாக இருந்தாலும் சில குறைபாடுகள் இருக்கலாம். அதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது.
அதிமுக–திமுக கூட்டணி தொடர்பாக நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இதுகுறித்து ஆர்.பி. உதயகுமார் பேசும்போது, கூட்டணி அமைப்பது குறித்து பேசப்பட்டதற்கான ஆதாரத்தை முதலில் காட்ட வேண்டும் என்று கூறினேன்.
ஆர்.பி. உதயகுமார் தேர்தலில் வெற்றி பெறவில்லை. தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினரும் இல்லை. எனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து அவருக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது செங்கோட்டையன்
தாராபுரம் தொகுதியிலும் வேறு கட்சியினரை சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
தவெகவில் இணைந்திருப்பவர்கள் தாமாக முன்வந்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த இயக்கத்தின் மீது ஈர்ப்பும் நம்பிக்கையும் இருப்பதால்தான் வருகின்றனர். யார் அழைத்தாலும் எந்த இயக்கத்திற்கும் மக்கள் சென்று விட மாட்டார்கள்.
நீண்ட காலமாக திராவிடக் கட்சிகள் அரசியலில் இருந்தாலும், அந்தக் கட்சிகளில் இருந்து மக்கள் இவ்வாறு தன்னார்வமாக வந்து வேறு இயக்கத்தில் இணையும் சூழல் முன்பிருந்ததில்லை. தற்போது தவெக மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஈர்ப்பும் நம்பிக்கையும் காரணமாகவே பலர் தாமாக முன்வந்து இணைந்து வருகின்றனர்” என தெரிவித்தார்.
