திருச்சி மாநகரம் தென்னூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் முகமது பாரூக் (32). ஆட்டோ மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இவரது சகோதரர் அசார் (28), மீன் கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை முகமது பாரூக்கும், அசாரும் வீட்டில் இருந்துள்ளனர். இவர்களது தாய் நிஷா, வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் முகமது பாரூக் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவர் கதறி அழுத நிலையில், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து தில்லை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அரவிந்த் பனாவத், தில்லை நகர் உதவி ஆணையர் விஜயகுமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சகோதரர்கள் இருவருக்கும் போதைப் பழக்கம் இருந்ததாகவும், குறிப்பாக அசார் கஞ்சா மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று இருவரும் போதையில் இருந்தபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது ஆத்திரமடைந்த அசார் வீட்டில் இருந்த கத்தியால் முகமது பாரூக்கின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அசாரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆட்டோ மெக்கானிக் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
