Headlines

ஜெம் வீரமணி வழக்கு : கடந்த அரசை குறை கூறுவது பொருத்தமாக இருக்காது : கார்த்திக் சிதம்பரம்

ஜெம் வீரமணி வழக்கு : கடந்த அரசை குறை கூறுவது பொருத்தமாக இருக்காது : கார்த்திக் சிதம்பரம்

ஜெம் வீரமணி சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே, அவர்களை குற்றம்சாட்டுவது பொருத்தமாக இருக்காது. இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டவர்கள் யார், யார் யாருக்கு பணம் சென்றுள்ளது என்பதையும் விசாரிக்க வேண்டும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த வழக்கில் கடந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே, அவர்களை குற்றம்சாட்டுவது பொருத்தமாக இருக்காது எனத் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டவர்கள் யார், யார் யாருக்கு பணம் சென்றுள்ளது என்பதையும் விசாரிக்க வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் காவல்துறை மட்டத்தில் நடைபெற்றதாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. அரசியல் தலைமையின் கவனத்திற்கு இது சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் கார்த்திக் சிதம்பரம் கூறினார்.

இடைத்தேர்தல் குறித்து கருத்து

தமிழக இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், தற்போதைய அரசியல் சூழல் அந்தக் கட்சிக்கு சாதகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக வேறு தவெக கட்சியினருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என்றும் கூறினார்.

ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மையான இடங்கள் இருப்பதால், ஆட்சி தொடர்வதற்கு எந்தவிதமான பாதுகாப்பற்ற நிலையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் தவெகவுக்கு ஆதரவளித்தாலும், ஆட்சியில் பங்கு பெறவில்லை. அவர்கள் தனித்து முடிவு எடுப்பதற்கு உரிமை உள்ளது. ஆனால், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே அவர்கள் போட்டியிடுகின்றார்களா என்பது தெரியவில்லை என்றும் கார்த்திக் சிதம்பரம் கூறினார்.

அதிகார மையங்களை பரவலாக்க வேண்டும்

எல்லா அதிகார மையங்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிர்வாகத்தை பரவலாக்கும் வகையில் சில துறைகளை மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு மாற்றலாம்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை திருச்சியில் நடத்தலாம். அமைச்சரவை ஆலோசனைக் கூட்டங்களையும் பல்வேறு மாவட்டங்களில் நடத்த வேண்டும். அமைச்சகங்களின் தலைமையகங்களையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என அவர் ஆலோசனை வழங்கினார்.

மின்சாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறைக்கு தற்போதைய தவெக அரசு காரணம் அல்ல என்றும், கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்களே இதற்கு பதில் கூற வேண்டும் என்றும் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

அதிகாரிகள் எழுதிக் கொடுப்பதை அமைச்சர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாத நிலையில், மின் தடையை நியாயப்படுத்திப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

தவெக அரசு நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டது போன்று, தமிழகத்தின் மின்சார நிலை குறித்தும் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்து பிரச்சினைகளுக்கு ஜாதி சாயம் பூச முயற்சிப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *