வியட்நாம் நாட்டிலிருந்து, இலங்கைக்கு சென்று கொண்டு இருந்த, வியட் ஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், செவ்வாய் இரவு நடு வானில், சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில், அவசரமாக பாதுகாப்பாக, தரையிறக்கப்பட்டது.
வியட்நாம் நாட்டில் உள்ள (Ho Chi Minh City)ஹோ சீ மஞ்ச் சிட்டி, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு, செவ்வாய்க்கிழமை மாலை வியட் ஜெட் ஏர்லைன்ஸ், பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 143 பயணிகள், 9 விமான ஊழியர்கள் உட்பட 152 பேர் இருந்தனர்.
இந்த விமானம் நடுவானில் சுமார் 36,000 அடி உயரத்தில் இலங்கை நோக்கி, பறந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, இந்த விமானம், சென்னை அருகே நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் ஒரு இயந்திரம் திடீரென பழுதடைந்து, செயல்படாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் விமானத்தை தொடர்ந்து இயக்குவது ஆபத்து என்பதை விமானிகள் உணர்ந்தார்கள். இதை அடுத்து விமானத்தை ஏதாவது ஒரு விமான நிலையத்தில், அவசரமாக தரையிறக்க விமானிகள் முடிவு செய்தார்கள். அப்போது சென்னை விமான நிலையம் தான் அருகில் இருக்கிறது, அதோடு சென்னை விமான நிலையத்தில் விமானத்தை, அவசரமாக தரையிறக்குவது மிகுந்த பாதுகாப்பானதும் என்பதை, விமானிகள் உணர்ந்தார்கள். இதை அடுத்து விமானிகள் உடனடியாக டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனுமதி கேட்டதோடு, விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதற்கான, அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தரும்படி, வியட் ஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்குவதற்கான, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், போர்க்கால அடிப்படையில் துரிதமாக செய்து முடித்தனர். அதன்பின்பு இரவு 10.30 மணி அளவில், விமானம் சென்னையில் தரை இறங்குவதற்கு, அனுமதி அளித்தனர்.
இந்த நிலையில் விமானம் இரவு 10.40 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில், பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மற்றும் வியட் ஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் உட்பட அனைவரும் பதற்றம் தணிந்து, நிம்மதி அடைந்தனர்.
அதன்பின்பு அந்த விமானம், விமான நிலையத்தில் பழுதடைந்த விமானங்கள் நிறுத்தி வைப்பதற்கான, ஃபே 44 ல் கொண்டு போய் நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் ஆகியோருக்கு, குடிநீர், சிற்றுண்டி போன்ற ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.
அதோடு விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த விமானத்தின் இயந்திரங்களை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இயந்திர கோளாறு சரி செய்த பின்பு, இன்று புதன் கிழமை விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 143 பயணிகள் உட்பட 152 பேருடன், நடுவானில் சுமார் 36,000 அடி உயரத்தில், பறந்து கொண்டு இருந்த, வியட் ஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறை, விமானிகள் தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு, விமானம் சென்னையில் அவசரமாக தரை இறங்கியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, விமானத்திலிருந்த 152 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
