காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் வருகிறது. இதனால் நீரில் கலங்கல் தன்மை அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் சுத்திகரிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா மாநிலம் குடகு, கபினி, கே.ஆர்.எஸ். அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்நிறத்தில் மண் கலந்த நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீரின் கலங்கல் தன்மை (Turbidity) வெகுவாக அதிகரித்துள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையத்தில், நீரின் கலங்கல் தன்மை 100 NTU-க்கு மேல் அதிகரிக்கும் போது, நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பான முறையில் இயக்க இயலாது.
தற்போது தலைமை நீரேற்று நிலையத்தில் பெறப்படும் நீரின் கலங்கல் தன்மை சுமார் 240 NTU என்ற அளவுக்கு அதிகரித்துள்ளதால், தண்ணீரை சுத்திகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நீர் உந்துதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நீரின் கலங்கல் தன்மை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுத்திகரிப்பு நிலையத்தை இயக்க அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கலங்கல் தன்மை குறைந்தவுடன், மீண்டும் நீர் உந்தும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்களை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு தர்ம்புரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.
