மனிதர்களை குறை சொல்வதைவிட, சிஸ்டத்தை சரிசெய்வதே முக்கியம். நிர்வாக அமைப்பு சரியாக இருந்தால் அதில் பணியாற்றும் ஒவ்வொருவரும் முறையாக செயல்பட முடியும் என
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் மாநில அளவிலான நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த அனைத்து பொறியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய அவர்,
தனக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறுப்பு வழங்கப்பட்டபோது, முதலமைச்சர் விஜய், இந்தத் துறைகளை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என அறிவுறுத்தியதாக அமைச்சர் கூறினார்.
மேலும், துறைகளில் ஊழல் இல்லாத வகையில் நிர்வாக அமைப்பை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். மனிதர்களை குறை சொல்வதைவிட, சிஸ்டத்தை சரிசெய்வதே முக்கியம்” எனக் குறிப்பிட்ட அமைச்சர், நிர்வாக அமைப்பு சரியாக இருந்தால் அதில் பணியாற்றும் ஒவ்வொருவரும் முறையாக செயல்பட முடியும் என தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்களைப் போன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாதமும் வெளிப்படையான அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் அறிவித்தார். சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது போன்று, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெறும் பணிகள் குறித்தும் பொதுமக்களும், இளைஞர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும் என அவர் கூறினார்.
புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்தும் அமைச்சர் மேடையில் பேசிய அவர்.ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் நீண்ட காலமாக நீடித்து வருகின்றன எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த 100 ஆண்டுகளுக்கான தேவைகளை கருத்தில் கொண்டு புதிய கட்டிடங்களை உருவாக்க வேண்டும் என்றார்.தற்போதைய தலைமைச் செயலகம் தமிழ்நாட்டின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்றதாக இல்லை என்றும், அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் புதிய தலைமைச் செயலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.புதிய தலைமைச் செயலகம் கட்டி முடிக்க சுமார் நான்கு ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் கூறினார். புதிய தலைமைச் செயலகத்திற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது இதனை விமர்சனங்கள் செய்து வருவதாகவும் கூறினார்.
அரசுப் பள்ளிகளில் உள்ள பழைய மற்றும் ஆபத்தான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றில் ‘ரெட் ஸ்டிக்கர்’ ஒட்ட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அரசு கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அரசு மருத்துவமனைகளில் சில இடங்களில் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அரசு கட்டிடங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கேமராக்கள் பொருத்தப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் AI கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றினால் விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வேகமாக வாகனம் ஓட்ட விரும்புவோருக்காக, புதிதாக உருவாக்கப்படும் மோட்டார் சைக்கிள் பந்தயப் பாதைகளில் அதனை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். சென்னையையும் தூத்துக்குடியையும் இணைக்கும் வகையில் எட்டு வழிச்சாலை அமைக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை கடல் வழித்தடம் அமைப்பது தொடர்பான திட்டம் குறித்தும் அவர் பேசினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதற்கு மக்கள் தான் காரணம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். “நாங்கள் காசு கொடுத்து வெற்றி பெறவில்லை” என்றும் அவர் கூறினார்.
பொதுப்பணித்துறையில் இதற்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 15 சதவீதம் வேறு ஒருவருக்கு சென்றதாக அமைச்சர் குற்றம்சாட்டினார்.
வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு, தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் அனைத்தும் சிறப்பான நிலையில் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் ஆண்டு முழுவதும் பணிகள் நடைபெறும் வகையில் செயல்பாடுகள் திட்டமிடப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
