Headlines

தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி : அமைச்சர் மீது குற்றச்சாட்டு

தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி : அமைச்சர் மீது குற்றச்சாட்டு

தூத்துக்குடி புறநகர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை மாற்றி, திமுகவில் இருந்து வந்தவர்களுக்குப் பதவி வழங்குவதாகக் கூறி, கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மதன் ராஜா, கடந்த சில மாதங்களாக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கும் உறவினர்களுக்கும் புதிய பொறுப்புகளை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த குழந்தை ராஜா என்பவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது உறவினரும் திமுகவைச் சேர்ந்தவருமான பாரத் என்பவரை புதிய ஒன்றிய செயலாளராக அமைச்சர் மதன் ராஜா அறிவித்தார்.

இப்பதவி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தை ராஜாவின் ஆதரவாளரும் தவெக ஒன்றிய இளைஞர் அணி செயலாளருமான முத்துக்குமரன் என்பவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்பொழுது அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலை முயற்சியின் போது தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்க்கு அவர் வெளியிட்ட வீடியோவில், தளபதி அண்ணனுக்கு வணக்கம். நீங்கள்தான் என் உலகம், என் உயிர் என்று வாழ்ந்து வருகிறேன். 2000-ம் ஆண்டிலிருந்து கடந்த 26 ஆண்டுகளாக உங்களது தீவிர ரசிகனாக உங்களுடன் பயணித்து வருகிறேன்.
விஜய் மக்கள் மன்றத்தில் இயங்கி வந்த நான், நீங்கள் கட்சித் தொடங்கியபோது தீவிரமாகக் கட்சி இணைந்து பணியாற்றினேன்.

இன்று நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்றிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், தூத்துக்குடி புறநகர் மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் குளறுபடிகளைப் பார்க்கும்போது உங்களின் பெயர் தொடர்ந்து களங்கப்பட்டு வருகிறது. இது குறித்து உங்களுக்குப் பலமுறை இ-மெயில் அனுப்பியுள்ளேன். நேரில் பேசவும் முயற்சித்தேன்.

ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நமது கட்சி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மாற்றுக்கட்சிகளில் இருந்து நமது கட்சிக்கு வந்தவர்களுக்குக் குறிப்பாக, தி.மு.க-வில் இருந்து புதிதாக வந்தவர்களுக்கே நமது கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் நமது கட்சி தி.மு.கவின் கூடாரமாகவே மாறி வருகிறது.

உங்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கிலேயே இங்குள்ள நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *