திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மணியார் குப்பம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மற்றும் அவருடைய வாரிசுதாரர்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் ஒரு செண்ட் நிலம் 1986 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டு
ஆதி திராவிட சமூக மக்களுக்கு வீட்டுமனைகளாக வழங்கப்பட்டது. அதற்கு இழப்பீடாக 4 கோடியே 66 லட்சம் கொடுக்க வேண்டும் என அறிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது வரை ரூ.1 கோடியே 61 லட்சம் மட்டுமே கட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் நடராஜன் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்க தலைவர் ரவிக்குமார் இது குறித்த வழக்கை வாதாடி வந்துள்ளார்.
இந்த நிலையில் திருப்பத்தூர் சார்பு நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரின் கார் மற்றும் டேபிள்கள், கணினிகள், ஆகியவற்றை பறிமுதல் செய்து கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து ரவிக்குமார் தலைமையிலான வழக்கறிஞர் குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
ஆட்சியரின் கார் வெளியே சென்றிருந்த்தால் ஜப்தி செய்ய முடியவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வழக்கறிஞர் ரவிக்குமார். நாங்கள் வருவதை அறிந்து மாவட்ட ஆட்சியர் காரை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக ஜப்தி செய்வோம். மேலும் உடனடியாக நடராஜன் குடும்பத்திற்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
