Headlines

முதலீடு ஈர்ப்பு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : அமைச்சர் ராஜ்மோகன்

முதலீடு ஈர்ப்பு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : அமைச்சர் ராஜ்மோகன்

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்தங்கள் முறையாக கையெழுத்தான பின்னர் முதலீடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிப்படையாக வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழும், தமிழ்நாடும் முதலமைச்சர் விஜய் தலைமையில் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி பயணித்து வருகிறது. நான் பட்டிமன்ற பேச்சாளராக இருந்த நிலையில் தற்போது சட்டமன்றத்தில் பேசத் தொடங்கியுள்ளேன். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினும் பட்டிமன்ற பேச்சாளரைப் போல எதுகை மோனையில் பேசி வருகிறார். ஆனால் அந்தப் போட்டியில் கூட திமுக இல்லை.

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசை விமர்சித்து வருகிறார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் அன்பாக பேசக்கூடியவர். மக்களுக்காகத்தான் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பணியாற்றி வருகிறோம்.

சட்டமன்ற நேரலை

முதலமைச்சர் உத்தரவின்படி சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. திருக்குறள் ஒலிக்கும் நேரம் முதல் சட்டமன்ற நிகழ்வுகள் நிறைவடையும் வரை நேரலை செய்யப்படுகிறது. கடந்த 29, 30 நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரில் சட்டமன்றத்தை பார்வையிட்டுள்ளனர். பள்ளி மாணவர்களும் அதிகளவில் சட்டமன்ற நிகழ்வுகளை பார்த்துள்ளனர்.

பல கோடி பேர் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் பார்த்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதையும் எந்தவிதமான மறைப்பும் இல்லாமல் ஒளிபரப்பி வருகிறோம்.

சட்டமன்றத்தில் ஒருவர் பேசும்போது மற்றவர்கள் அமர்ந்து கேட்பதுதான் ஜனநாயக நடைமுறை. அமைச்சர் பேசும்போது அனைவரும் அமர வேண்டும். சபாநாயகர் எழுந்து நிற்கும்போது உறுப்பினர்கள் அமர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் சட்டமன்ற மரபு. அந்த வகையில் சட்டமன்றத்தில் அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் வரிக்கு வரி முதலமைச்சரை விமர்சித்தபோதும் நாங்கள் பொறுமை காத்தோம். எதிர்க்கட்சியினரும் ஜனநாயக நடைமுறையை முறையாக பின்பற்ற வேண்டும்.

யார் தயவிலும் ஆட்சி இல்லை

பெண்கள், வாக்காளர்கள், பொதுமக்கள் மற்றும் சாமானிய மக்களின் தயவில்தான் இந்த ஆட்சி அமைந்துள்ளது. வேறு எந்தக் கட்சியின் தயவிலும் தமிழக வெற்றி கழகத்தின் அரசு நடைபெறவில்லை. மக்களின் ஆதரவுடன் இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெறும்.

திமுக கூட்டணிக் கட்சிகளிடம் பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது. ஆனால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். அதனை அவர் செயல்படுத்தியுள்ளார்.

சட்டமன்றத்திற்கு இடநெருக்கடி

ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் கலைஞர் காலத்தில் கட்டப்பட்ட சட்டமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் மாற்று சட்டமன்றம் அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. தற்போது சட்டமன்றத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும், மனு அளிக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மக்களின் கருத்துகளை கேட்டறிந்து சுமுகமான முறையில் முதலமைச்சர் முடிவெடுப்பார். மக்களின் நலனை கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும்.

லண்டன் முதலீடுகள் குறித்து விரைவில் அறிவிப்பு

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள் மற்றும் கிளைகள் பல்வேறு நாடுகளில் உள்ளதால், அந்தந்த நாடுகளுக்குச் சென்று நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கமான நடைமுறை.

லண்டனில் முதலமைச்சர் ஈர்த்துள்ள முதலீடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். தற்போது பேச்சுவார்த்தை நிலையில் உள்ள முதலீடுகள் தொடர்பான தகவல்கள் உள்ளன. ஒப்பந்தங்கள் முறையாக கையெழுத்தான பிறகு, அவை வெளிப்படைத்தன்மையுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். தமிழகத்திற்கு நல்ல முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.

முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை கேட்டால் வெள்ளைத் தாளை வெளியிடுபவர்கள்தான் தற்போது இதுகுறித்து கேள்வி எழுப்புகின்றனர் என்றும் அமைச்சர் விமர்சித்தார்.

சண்முகத்தின் கருத்துகளை ஏற்றுக்கொள்வோம்

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சண்முகத்தின் அரசியல் அனுபவம் தங்களது வயதுக்கு இணையானது. “நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே” என்று பேசக்கூடியவர் அவர். அவர் தனது கருத்தை தெரிவிப்பது அவரது உரிமை.

அவர் வயதில் மூத்தவர் என்பதால், அவர் கூறும் கருத்துகளில் நடைமுறைக்கு ஏற்றவற்றை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வோம். அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

சட்டமன்றத்தில் நடைபெற்றது அனைத்து கட்சிகளின் கூட்டம்தான். சட்டமன்றத்தில் நடத்தாமல் வெளியில் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த கருத்து. எங்களைப் பொறுத்தவரை பேச்சைக் குறைத்து செயல்பாட்டின் மூலம் நிரூபித்து வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *