தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே மலைப்பாதையில் ரயில் மீது பாறை உருண்டு விழுந்ததில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், கேரளா, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தெற்கு ரயில்வே சார்பில் தினமும் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தருமபுரி – சிவாடி ரயில் நிலையங்களைத் தொடர்ந்து தொப்பூர் – முத்தம்பட்டி இடையே மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதையில் ரயில்கள் பாதுகாப்பு கருதி மெதுவாக இயக்கப்படுகின்றன. தற்போது இப்பகுதியில் மலைப்பாதையை அகலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று அதிகாலை நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த 17236-ம் எண் பயணிகள் ரயில் முத்தம்பட்டி மலைப்பாதை வழியாக சென்றபோது, மலையில் இருந்து திடீரென பாறை ஒன்று உருண்டு தண்டவாளத்தில் விழுந்தது.
அப்போது ரயில் அந்த பாறையின் மீது மோதியதில், ரயிலின் முன்பகுதியில் உள்ள பெட்டி சேதமடைந்தது. தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பாறை அகற்றப்பட்ட பின்னர் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. மலைப்பாதையில் பாறை உருண்டு விழுந்து ரயில் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
