திருவண்ணாமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், செங்கம் அடுத்த கரியமங்கலம் சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ராஜஸ்தானில் இருந்து திருவண்ணாமலைக்கு இரண்டு சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட 35 மூட்டை ‘ஹான்ஸ்’, 13 மூட்டை குட்கா, 45 கிலோ ‘விமல்’ மற்றும் 15 கிலோ ‘V1’ உள்ளிட்ட சுமார் ஒரு டன் எடையுள்ள போதைப்பொருட்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜேஷ் (24), மனோஜ்குமார், தர்மேந்திரன் ஆகிய மூவரையும் கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், மேல் நடவடிக்கைக்காகச் செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யச் செங்கம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், கைதானவர்களில் ஒருவரான ராஜேஷுக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதையடுத்து, அவரை இரு போலீசார் இருசக்கர வாகனத்தில் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்குச் சென்றதும் ராஜேஷ் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.
இச்சம்பவம் குறித்து காவல் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள செய்யாற்றுப் படுகையில் உள்ள முட்புதர்களில் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான நபர் தப்பியோடிய சம்பவம் காவல்துறையினருக்குப் பெரும் அதிர்ச்சியையும், செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
