தமிழக முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் அறிகுறி உடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சலுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொசு வலையுடன் கூடிய 30 படுக்கைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக அமைக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய காய்ச்சலுக்கான சிறப்பு புறநோயாளிகள் பிரிவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் மாதத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது டெங்கு காய்ச்சல் அறிகுறி உடன் 30 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பவானி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு அறிகுறி உடன் இருக்கும் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையில் நேரடியாக வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
