வேலூர் காட்பாடியில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் காலதாமதம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன. தற்போது 13 பல்கலைக்கழகங்களில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் மட்டுமே துணைவேந்தர் உள்ளார். அந்தப் பதவிக்காலமும் 2027 ஜனவரி மாதத்தில் நிறைவடைய உள்ளது.
துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரம் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளது. இதனால் இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க முடியாத சூழல் உள்ளது. இருப்பினும், முதலமைச்சர் தலைமையில் உயர்கல்வித்துறை மற்றும் ஆளுநர் தரப்புடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பாக முதலமைச்சர் நல்ல செய்தியை வெளியிடுவார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
6,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்
தமிழ்நாட்டில் உதவிப் பேராசிரியர் பணிகளில் சுமார் 9,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுமார் 42,000 பேர் TRB தேர்வு எழுதியுள்ள நிலையில், அதில் சுமார் 24,000 பேர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்ததாக நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். அதன் பின்னர் 2,700-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் விரைவில் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் மொத்தம் 6,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
“தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்களே இல்லை என்ற நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கட்டமைப்பு வசதிகள்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நூலகக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், கேண்டீன்கள், சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இந்த நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடர்பான கோரிக்கைகளும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து
ஆளுநர், குடியரசுத் தலைவர் அல்லது துணைக் குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியாக பாடப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழ்நாடு அரசின் மேடைகள் மற்றும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அதன்படி அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறினார்.
துணைக் குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்?
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைக் குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு, அவருடன் தான் ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என்றும், “நான் ஒரு தமிழன்” என்றும் அமைச்சர் கூறினார்.
துணைக் குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்ததால், தமிழக அரசின் பிரதிநிதியாக அவரை வரவேற்கும் வகையிலேயே அவருடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாகவும், ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
லண்டன் பயணம் தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம்
முதலமைச்சரின் லண்டன் பயணம் தொடர்பாக வெள்ளையறிக்கை வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, இது குறித்து அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும், உலக நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு பல முதலீட்டாளர்கள் வர உள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
அயலக மாணவர் விவகாரம்: “எதிர்க்கட்சிகளின் சித்து விளையாட்டு”
அயலக மாணவர் தொடர்பான வைரல் வீடியோ மற்றும் அமைச்சர் வன்னியரசு கூறியதாக வெளியான கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், அந்த மாணவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் கோருவதை வழங்குவதற்கான தார்மீக உரிமை தமிழக அரசுக்கு இருப்பதாகவும் கூறினார்.
“இந்த விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் தங்களது சித்து விளையாட்டை ஆரம்பித்திருக்கின்றன. இது எனக்கு நகைப்பாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
அந்த மாணவர் தமிழ் சகோதரர் என்பதால், அவருடைய கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான விருப்பத்தை தமிழக அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
