Headlines

பிரியாணியில் வண்டு, சாப்பிட சொன்ன ஹோட்டல் நிர்வாகி : கடையை மூடிய அதிகாரிகள்

பிரியாணியில் வண்டு, சாப்பிட சொன்ன ஹோட்டல் நிர்வாகி : கடையை மூடிய அதிகாரிகள்

பெரம்பலூர் அருகே பிரபல ஹோட்டலில் பிரியாணியில் வண்டு, ஐஸ்கிரீமில் ஈ இருப்பதாக கூறிய வாடிக்கையாளரிடம்
அட்ஜஸ்ட் செய்து சாப்பிடுங்கள் என ஹோட்டல் நிர்வாகி கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறையினர் கடையை மூட உத்தரவிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டாரத்திற்குட்பட்ட திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில்
கடந்த 2 நாட்கள் முன்பு உணவு சாப்பிட்ட நுகர்வோர் ஒருவர், தாம் உட்கொண்ட பிரியாணியில் வண்டு இருந்ததாகவும், பின்னர் வாங்கிய ஐஸ்கிரீமில் ஈ இருந்தததையும் கடை நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார், கடை நிர்வாகி அட்ஜஸ்ட் செய்து சாப்பிடுங்கள் எனதெரிவித்துள்ளார். மேலும் வாடிக்கையாளர் இதனை வீடியோ எடுத்துள்ளார்.

இருவருக்கும் இடையே நடந்த இந்த சம்பவத்தை
வாடிக்கையாளர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும், இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து கொண்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசித்
பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில்,உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டார். அவரது
உத்தரவின் படி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சுகந்தன் மற்றும்
வேப்பூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சின்னமுத்து,பெரம்பலூர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், பெரம்பலூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் விக்னேஷ், வேப்பந்தட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் புவனா ஆகியோர் கொண்ட குழுவினர்
சம்பந்தப்பட்ட உணவகத்தில் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது உணவகத்தில் உணவு தயாரிப்பு, சேமிப்பு, பராமரிப்பு, சுகாதார நடைமுறைகள், உணவு கையாளும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டன. தேவையான இடங்களில் உணவு மாதிரிகள்/ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு மேற்கண்ட குறைபாடுகள் மற்றும் உணவு பாதுகாப்பு விதி மீறல்கள் தொடர்பாக உரிய சட்ட விதிகளின்படி மாவட்ட தீர்வு அலுவலரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டு,
பொதுமக்களின் உடல்நலம் மற்றும் உணவு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட உணவகத்தின் FSSAI உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு ஹோட்டலை தற்காலிகமாக மூடுவதற்கான உத்தரவை வழங்கினர்.

குறைபாடுகளை முழுமையாக சரி செய்து, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார தரநிலைகள் பூர்த்தி செய்து சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு, தகுந்த அலுவலரின் அனுமதி பெற்ற பின் ஹோட்டலை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் அனைத்து உணவு வணிக நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரநிலைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் உணவு தொடர்பான குறைபாடுகள் ஏதேனும் காணப்பட்டாலும் ,மேலும் குட்கா பான்மசாலா கடைகளில் விற்பனை செய்தால் பொதுமக்கள் உணவு பாதுகாப்புத்துறைக்கு போன் மூலமாகவும் ,வாட்ஸ்அப் மூலமாகவும் 9444042322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் சுகந்தன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *