மின்வெட்டே இல்லை என்று பொய் கூறாதீர்கள்,அனைத்து இடங்களிலும் மின்வெட்டு உள்ளது.
இன்று காலை எனது வீட்டிலேயே மின்வெட்டு ஏற்பட்டதால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முழுமையாகக் காண முடியவில்லை. என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் பாஜக சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்டத் தலைவர் குமார் தலைமையில், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதியோர் இல்லத்திற்கு உணவுகளும், தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் பாஜக தேசிய அமைப்பாளர் பி. எல். சந்தோஷ், மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்:
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசென்று, ஊழலற்ற ஆட்சியை வழங்கி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எங்களது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
சமீபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில், “இந்தியா எந்த ஒரு வல்லரசு நாட்டையும் சார்ந்து இல்லை; நாங்களே வல்லரசாக வளர்ந்து வருகிறோம் என டெல்லி பிரகடனம் செய்யப்பட்டது.
இதற்கு உலக நாடுகள் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால், அங்கு அசைவ உணவு பரிமாறப்படவில்லை என காங்கிரஸும் ராகுல் காந்தியும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவர்களின் அரசியல் தரம் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பிரதமர் நலமுடன் வாழ இன்று மாலை அனைவரது வீடுகளிலும் ‘ஆசீர்வாத தீபம்’ ஏற்றப்படும். மேலும், பிரதமரின் சாதனைகளை விளக்கும் “காஃபி டேபிள்” புத்தகமும் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
15-ஆம் தேதி “தாய்மாமன் தங்க மோதிரம்” வழங்கப்படும் என அறிவித்துச் செய்யவில்லை. ஆனால், அதற்கு முன்பாகவே நாங்கள் அதைச் செய்துவிட்டோம். காமராஜர் சிற்றுண்டித் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை தவெக அரசு தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறது.
வெளிநாட்டிற்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வருவார் என்று பார்த்தால், இந்தியாவில் உள்ள நொய்டாவில் ஒப்பந்தம் போட்டு வருகிறார். கதை வசனத்தைச் சினிமாவில் எழுதலாம், ஆட்சியில் எழுதலாமா?
மக்கள் செலுத்திய வாக்கினை உதாசீனப்படுத்திவிட்டீர்கள் என மரகதம் குமரவேல் வழக்கில் உயர்நீதிமன்றமே அரசுக்குக் கொட்டு வைத்துள்ளது. இதற்கு இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள்.
பள்ளிக் கூடங்கள் இடிந்து விழுகின்றன, உணவு சரிவர வழங்கப்படுவதில்லை. முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளது.
எக்காரணத்தைக் கொண்டும் பள்ளி கதவுகள் மூடப்படக்கூடாது;
பள்ளிக்கல்வித் துறையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பாமக நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளது. எங்கள் மாநிலத் தலைவர் அங்குப் பிரச்சாரத்திற்காக மூன்று பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார். தொகுதி மக்களிடம் உரிமையோடு வாக்கு கேட்கும் உரிமை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மட்டுமே உண்டு; திமுகவிற்கு அந்த உரிமை இல்லை.
எனக்கு அமைச்சர் பதவி மீது ஆசை இருந்திருந்தால் நான் எப்போதோ ஆகியிருப்பேன். மக்களின் குரலாக இருக்கவே இங்கு வந்துள்ளேன். எனது அரசியல் வருகையைக் கொச்சைப்படுத்த வேண்டாம். பதவி ஆசையினால்தான் மரகதம் குமரவேல் போன்றோர் கூட்டணியை விட்டு வெளியேறி சாக்குபோக்குகளைச் சொல்லி வருகின்றனர்.
பாஜகவைக் காலூன்ற விடமாட்டோம் என்று திருமாவளவன் சொல்லச் சொல்ல, பாஜக கண்டிப்பாகக் காலூன்றும். இரு தினங்களுக்கு முன்பு திருமாவளவன் முன்னிலையிலேயே அவரது தொண்டர்கள் அடித்துக்கொண்டனர். “அடங்க மறு, அத்துமீறு” என்பதைத் தொண்டர்களுக்கு அவர் ‘ஓவர் டோஸ்’ ஆகக் கொடுத்துவிட்டார். பாஜக எப்போதும் பெரியாழ்வார் பாதையில்தான் பயணிக்குமே தவிர, பெரியார் பாதையில் அல்ல.
மின்சாரத் துறை அமைச்சருக்கு எங்களது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று காலை எனது வீட்டிலேயே மின்வெட்டு ஏற்பட்டதால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முழுமையாகக் காண முடியவில்லை.
மின்வெட்டே இல்லை என்று பொய் கூறாதீர்கள்; அனைத்து இடங்களிலும் மின்வெட்டு உள்ளது. என்றார்
