புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் மனுதாக்கல் செய்தார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி பொது தேர்தலில், கடந்த முறை த.வெ.க., கூட்டணியில், நேயம் மக்கள் கழகம் சார்பில், அதன் பொதுச்செயலாளர் விநாயகம் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார். அவர் மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட நேயம் மக்கம் கழக தலைவர் நேரு எம்.எல்.ஏ., முயற்சி மேற்கொண்டு, த.வெ.க., கூட்டணியில் தற்போதுள்ள அனைத்து கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், விநாயகம் காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில், காங்., கட்சியில் இணைந்தார். இதற்கிடையே தமிழகத்தில் த.வெ.க., ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூ., சார்பில் அதன் மாநில செயலாளர் சலீம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், த.வெ.க., யாருக்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் நேற்று காலை காங்., தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர், தமிழக அமைச்சரும், த.வெ.க., பொதுச் செயலாளருமான புஸ்சி ஆனந்தை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், சந்தித்து ஆதரவு கேட்டு கடிதம் அளித்தனர். பின்னர் புஸ்சி ஆனந்த், வைத்திலிங்கத்திடம் இடைத்தேர்தலில் காங்., வேட்பாளரை ஆதரித்து த.வெ.க., நிர்வாகிகள் பணியில் ஈடுபடுவார்கள் என, உறுதியளித்ததாக, காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காங்., வேட்பாளராக விநாயகம் நிறுத்தப்படுவதாக, நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது.
இந்த நிலையில் இன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விநாயகம் மனு தாக்கல் செய்தார்.
மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ராமு, சாய் சரவணகுமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் ஆகியோருடன் ஊர்வலமாக புறப்பட்டு தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை தேர்தல் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் விநாயகம் மனுதாக்கல் செய்தார்.
இன்று கடைசிநாள் என்பதால் வேட்புமனுதாக்கல்
தீவரமாக நடைபெறுகிறது.
வேட்பு மனுக்கள் மீது, நாளை பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற, வரும் 19ம் தேதி கடைசி நாள். அதன் பின், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அக்டோபர் 6, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
