ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சின்னமாயாகுளம் பகுதியிலுள்ள கருவேல மர காட்டில் இரண்டு சடலங்களை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே
சின்னமாயாகுளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபி (35) மற்றும் கணேசன் என்ற ரியாசுதீன் (55). இவர்கள் இருவரும் சின்னமாயாகுளம் கிராமத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டு கருவேல மரங்கள் சூழ்ந்த பகுதியில் சடலமாகக் கண்டறியப்பட்டனர்.
இறந்த இருவரின் மூக்கு மற்றும் கண்ணில் இருந்து ரத்தம் கசிந்த நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்களின் உடலின் வேறு எந்தப் பகுதிகளிலும் வெளிப்படையான காயங்கள் அல்லது வெட்டுத் தழும்புகள் ஏதும் இல்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்த ஏர்வாடி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூக்கு மற்றும் கண்ணில் ரத்தம் வந்த நிலையில் ஒரே பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்தது கொலையா அல்லது விஷமருந்தி தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்ட சுற்றறிக்கையில் சின்ன மாயா குளம் அருகே கருவேலம் காட்டுப்பகுதியில் இருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்கள் உடம்பில் எந்த காயமோ அல்லது வெட்டுக்காயமும் இல்லை எனவே இதில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் முழுமையாக தெரியும். இது குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதால் தவறான செய்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது
