கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.
இந்நிலையில் கரூர் அருகே உள்ள ஆறுரோடு புத்தாம்பூர் பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம், அவரது வசந்தி மற்றும் ஜோதிமணி ஆகிய மூன்று பேரும், கரூர் நகரப் பகுதியில் தங்களது சொந்த வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கரூர்–மதுரை பைபாஸ் சாலையில் உள்ள கருப்பம்பாளையம் பிரிவு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த TN 69 BC 1608 என்ற பதிவு எண் கொண்ட லாரி, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
லாரி மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்திருந்த அவரது அக்கா மகள் ஜோதிமணி (வயது 40) மற்றும் மனைவி வசந்தி (வயது 56) ஆகிய இருவரும் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முத்துலிங்கம் படுகாயமடைந்தார். விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தான்தோன்றிமலை போலீசார், விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் உடல்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்துக்குக் காரணமான லாரி மற்றும் அதன் ஓட்டுநர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
