சட்டமன்றத்தில் நடந்த விவாதம் குறித்த தகவலை துண்டுச் சீட்டில் குறிப்பாக எழுதி கொடுத்தார்கள், அவையை எப்படி நடத்த வேண்டும் என குறிப்பு கொடுக்கவில்லை எந்த துண்டுக்கும் எந்த சீட்டுக்கும் எந்த துண்டு சீட்டுக்கும் அடி பணிய மாட்டேன். இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத நான்கு தொகுதி ராஜினாமா உறுப்பினர்களின் நேரடி விசாரணை நடத்த காத்திருக்கிறோம் தேதி குறிக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எம் எல் ஏ மார்க்கண்டேயின் மீது உரிமை மீறல் புகார் தொடர்பான நடவடிக்கை நிலுவையில் உள்ளது என நெல்லையில் சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் தெரிவித்தார்.
நெல்லை தனியார் தங்கும் விடுதியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே சி டி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஏகமனதாக சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மனசாட்சிக்கும் இறைவனுக்கும் பயந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரது மாண்பையும் காப்பது எனது பணி. சட்ட விதிகளை மதித்து, விதிகளில் சொல்லப்பட்டதும், மரபாக ஏற்படுத்தப்பட்டதுமான நடைமுறைகளை ஒட்டித்தான் சில முடிவுகளை நான் சட்டமன்றத்தில் எடுத்தேன். அப்படித்தான் பல மாற்றங்களையும் நீங்கள் பார்த்திருந்தீர்கள்.
எப்போதும் பேசிக் கொண்டிருந்த உறுப்பினர்களின் நிலையை மாற்றி, புதிய உறுப்பினர்களுக்குப் பேச வாய்ப்புகள் வழங்கினேன். கட்சி பாகுபாடின்றி அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. சட்டமன்றத்தில் நடந்தது அனைவரும் அறிவீர்கள். கடைசி இரண்டு நாட்களில் திமுக மனக்குறை பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சரின் பதிலுரை திங்கட்கிழமை உள்ளது. நீங்கள் பேசியதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டதோ, அதேபோல்தான் முதலமைச்சர் பேசும்போதும் அனுமதிப்பேன் என சொல்லியிருந்தேன். அப்படித்தான் உரையை அவர்கள் ஆரம்பித்தார்கள். உரை ஆரம்பிக்கப்பட்ட முதல் நிமிடம் தொடங்கி கடைசி நிமிடம் வரை திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை அவையில் உள்ள அனைவரும் அறிவார்கள். அதேபோல் நாட்டு மக்களும் அறிவார்கள். அனைத்தும் நேரலையில் உள்ளது. சட்டமன்றத்தில் உள்ள அனைத்து செய்திகளும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கையில் பதாகை ஏந்தி நின்றது சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. அது குறித்து இந்தக் கேள்வியும் எடுக்கவில்லை; எந்த நடவடிக்கையும் நான் எடுக்கவில்லை. அதனை அனைத்து மக்களும் பார்த்தார்கள். அதற்கு வாய்ப்பும் இருந்தது. முதலமைச்சரின் பேச்சை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் செயல்படுகிறார்கள் என்ற கவலை எனக்கு இருந்தது. அவர்கள் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார்கள்.
எப்போது எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்ற முடிவை நான்தான் எடுப்பேன். நான்தான் எடுத்தேன். முதலமைச்சரின் பேச்சு முழுமையாக மக்களுக்குச் சென்ற பின்னர், எதிர்க்கட்சியினர் இருந்த பக்கம் திரும்பி, அவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்று வினவியபோதுதான் அவர்களுக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. அமைதியாக அவர்கள் பாயிண்ட் ஆஃப் ஆர்டர் கேட்டிருந்தால் அனுமதி அளித்திருப்பேன். முதலமைச்சரின் பேச்சு மக்களுக்குச் சென்றுவிடக்கூடாது என்ற கவலையில் அவர்கள் செயல்பட்ட விதம் உகந்ததாகப் படவில்லை. அதனால்தான் அவர்களுக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது.
முதல்வர் பதிலுரைக்கு மறுநாள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஏ.வ. வேலு பேச முற்பட்டார். அவருக்குப் பேச முழு அனுமதியும் வழங்கப்பட்டது. அவரது பேச்சுக்கு சட்டமன்றத்தில் முறையாக அமைச்சர்கள் பதில் வழங்கினார்கள்.
சட்டமன்றத்தில் அவர்கள் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதத்திலும், சபையை நடத்தவிடாமல் தடுக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். அதனால்தான் எதிர்க்கட்சி கொறடா, அவர்களைப் பேச அனுமதி வழங்குகிறேன்; நேரம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என சொல்லியிருந்தேன். ஆனால் அவர் பேசவில்லை. அவர் பேச விரும்பவில்லை என்றாலும், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசுவதற்குக்கூட அனுமதி வழங்கப்பட்டது.
எனது இருக்கையைச் சுற்றி நின்று தொடர்ந்து கூச்சல் எழுப்பினார்கள். நான் பேசுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கவில்லை. பேசுங்கள் என்றுதான் தொடர்ந்து அவர்களை வலியுறுத்தினேன். இது அவை உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றாகத் தெரியும். பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோதிலும் அவர்கள் ஏன் பேசவில்லை என்பதற்கான விளக்கத்தை நான் எப்படி கொடுக்க முடியும்? அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன்; அவர்கள்தான் அதை பயன்படுத்தவில்லை.
சபையின் மாண்பைக் குலைத்து, அமைதியைக் குலைக்க முயற்சி செய்வதை கருத்தில்கொண்டுதான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. யாரையும் வெளியே அனுப்புவது எனது நோக்கம் அல்ல. வெளியே அனுப்பினால் வருத்தப்படும் நிலையில்தான் நான் உள்ளேன்.
திமுகவிற்குப் பேச வாய்ப்பு கொடுத்தது யார், பேசுவதற்கு மறுத்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். முறையான வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை அதிகமான நேரம் திமுக உறுப்பினர்களுக்குத்தான் ஒதுக்கப்பட்டது. அதிகமான நேரம் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள்தான் பேசியுள்ளனர். அதேபோல் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாருக்கும் எந்த வாய்ப்பும் வழங்கவில்லை என்ற குறை யாருக்கும் இருக்காது. நான் நடுநிலையோடுதான் நடந்துகொண்டேன்.
எந்தத் துண்டுக்கும், எந்தச் சீட்டுக்கும் அடிபணிபவன் நான் அல்ல. அவ்வப்போது எழும் சந்தேகங்களை சட்டப்பேரவைத் துறை செயலாளர்களிடம் கேட்டு, தகவல்களைப் பெறுவது வழக்கம். அமலாக்கத்துறை மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியதை எந்த நாள், எந்த நேரத்தில் இதற்கு முன்னால் பேசினார்கள் என்ற குறிப்பைத் தாருங்கள் என்று கேட்டிருந்தேன். அந்தத் துண்டுச் சீட்டைத்தான் கொடுத்தார்கள்.
மரபை மீறி விவாதங்கள் கடந்த காலங்களில் நடந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். முதல் கூட்டத்தொடரில் எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டது என்ற விவரம்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கேட்ட நேரமும், ஒதுக்கப்பட்ட நேரமும் போதுமானது என நான் கருதுகிறேன்.
புதிய தலைமைச் செயலகம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும்போது அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
ராஜினாமா செய்த இரண்டு இடங்களுக்கு தேர்தல் ஆணையம் தேதி அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறையில் உள்ளது. மீதமுள்ள நான்கு பேரின் பிரச்சினை ஆய்வில் உள்ளது. அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். விவாதம் நடந்து வருகிறது. விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. நேரடி விசாரணைக்கு அழைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. அடுத்த கட்ட விசாரணைக்காக காத்திருக்கிறோம். தேதி குறிக்கப்பட்டு முறையான விரிவான நேரடி விசாரணை நடைபெறும்.
ஏற்கனவே சட்டமன்ற உரிமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முறையாகக் குழுக்கள் கூடும்போது எந்தெந்தப் பிரச்சினைகளை உரிமைக் குழுவில் வைக்கலாம் எனப் பேசி முடிவெடுக்கப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முறையாக நடவடிக்கை எடுக்கப்படும். அது எனது ஆய்வில் உள்ளது என தெரிவித்தார்.
